வெளியிடப்பட்ட நேரம்: 21:29 (22/11/2018)

கடைசி தொடர்பு:21:29 (22/11/2018)

`எதுவுமே சொல்லாம எங்களைத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டாரே!’ - கலங்கவைத்த தென்னை விவசாயி மனைவியின் கதறல்

தென்னை மரங்களின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியில் விவசாயி ஒருவர் உயிரிழந்திருப்பது தஞ்சை மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

கஜா புயலில் பாதிக்கப்பட்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஏற்கெனவே ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை. அதற்குள் மற்றொரு தென்னை விவசாயி அதிர்ச்சியில் மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, தென்னை விவசாயிகளை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. கால்நடைகள் செத்துமடிந்தன. இதையெல்லாம்விட விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னை மரங்கள் வோரோடு சாய்ந்துவிட்டன. இதில் பல விவசாயிகள் எதிர்காலத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என திக்கு தெரியாமல் புலம்பி வருவதோடு, அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. இதனால் பெரும் சோகத்தில் இருந்த ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காட்டைச் சேர்ந்த தென்னை விவசாயி சுந்தர்ராஜன் இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவாஜி என்ற விவசாயி தென்னை மரங்கள் சாய்ந்த கவலையில் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் அப்பகுதி மக்களை கண்ணீரில் கதற வைத்துள்ளது.

ஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னை விவசாயி சிவாஜி. இவருக்கு மனைவி ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். ஒரு மகனை விவசாயத்திலேயே ஈடுபட வைத்தவர் மற்றொரு மகனை டிகிரி படிக்க வைத்துள்ளார். அவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. தென்னையை நம்பியே குடும்பத்தை ஓட்டி வந்தார் சிவாஜி. 

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் அவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து விட்டன. இதில் பெரும் மன உளைச்சலில் சிவாஜி தவித்து வந்துள்ளார். யாரிடமும் சரியாக பேசாமலேயே இருந்ததோடு, `ஒரு மரத்தை கூட மிச்சம் வைக்காம அடியோடு சாய்த்து விட்டதே காத்து’ என கூறிக்கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று மாலை தோப்பை பார்க்கச் சென்றிருக்கிறார் கொஞ்சம் நேரம் அங்கேயே நின்று கொண்டு சாய்ந்து கிடக்கும் மரங்களை விரக்தியாக பார்த்திருக்கிறார். பின்னர் வீடு திரும்பிய சிவாஜி ஒன்றுமே பேசாமல் சாய்ந்தவர், அப்படியே இறந்துவிட்டார் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி குணமதி கதறி அழ அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் கூடிவிட்டனர். `கொல்லைக்குப் போயிட்டு வந்தவர் ஒண்ணுமே பேசாமல் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லிட்டுதான் செய்வார். இப்படி எதுவுமே பேசாமல் எங்களைத் தவிக்க விட்டுட்டு போயிட்டாரே’’ என அவர் மனைவி கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க