வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (23/11/2018)

கடைசி தொடர்பு:00:00 (23/11/2018)

'அய்யர்மலை கிரிவலத்தில் சித்தர் ஒளிக்கீற்று?' - குளித்தலை வைரல்!

 கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கு சித்தர் வானத்தில் இருந்து இறங்கி வந்து தெய்வீக ஒளியோடு மலையேறியதாக கிளம்பி இருக்கும் தகவல் குளித்தலைப் பகுதியில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கிரிவலம்

கரூர் மாவட்டம்,குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது அய்யர்மலை. இங்குள்ள ஆயிரம் அடி உயர மலையில் கொலுவீற்றிருக்கிறார் ரெத்தினகிரீஸ்வரர். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோயில்,கரூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சிவன் கோயிலாகும். பக்தர்கள் வேண்டும் அனைத்து வேண்டுதல்களையும் ரெத்தினகிரீஸ்வரர் உடனடியாக தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

இதனால்,கரூரில் மட்டுமின்றி,வெளிமாவட்டங்கள்,வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு படையெடுத்து வருகிறார்கள். இந்நிலையில்,கொல்லிமலையில் வசிக்கும் சித்தர்களைவிட இந்த அய்யர்மலையில் அதிகம் சக்தியுள்ள சித்தர்கள் உலாவுவதாக இந்த பகுதி மக்களிடம் நம்பிக்கை உள்ளது. 'இங்கு வரும் சித்தர்களை பௌர்ணமியில் தரிசிக்கலாம்' என்றபடி ஒவ்வொரு பௌர்ணமிக்கும் எண்ணற்ற பக்தர்கள் இந்த கோயிலுக்கு படையெடுத்து வருகிறார்கள். 'சாதாரண மனிதர்களுக்கு,பக்தர்களுக்கு சித்தர்கள் காட்சிதரமாட்டார்கள். ஞானிகளுக்கும்,முற்றும் துற்ந்த துறவிகளுக்கும்தான் அவர்களை காணும் அபூர்வ வாய்ப்புக் கிட்டும்' என்றும் இந்த பகுதி மக்கள் நம்பிக்கையாக சொல்கிறார்கள்.

இந்நிலையில்,கடந்த பௌர்ணமியன்று இந்த அய்யர்மலை கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர் ஒருவரின் செல்போனில் இங்கு சித்தர் ஒருவர் வந்து போன அபூர்வ காட்சி சிக்கியதாக சொல்லி சில புகைப்படங்கள் குளித்தலை பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 இதுபற்றி,நம்மிடம் பேசிய அய்யர்மலையைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், "சில நாள்களாக குளித்தலைப் பகுதியில் சில புகைப்படங்கள் பரவி வருகிறது. வானில் இருந்து பெரும் ஒளிவெள்ளம் கிளம்புவது போலவும்,அதனை தொடர்ந்து அய்யர்மலையில் கீழிலிருந்து உச்சி வரை புள்ளிபுள்ளியாக ஒரே நேர்க்கோட்டில் ஒளிக்கீற்றுகள் இருப்பது போலவும் உள்ள புகைப்படங்கள்தாம் அவை. அதாவது,வான் வெளியில் இருந்து சித்தர் ஒருவர் இறங்கும் தெய்வீக ஒளிக்கீற்றுதான் வானத்தில் உள்ள அந்த ஒளிவெள்ளம் என்றும்,மலையில் புள்ளி புள்ளியாக உள்ள ஒளிக்கீற்றுகள் அந்த சித்தர் தனது கையில் லிங்கத்துடன் ரெத்தினகிரீஸ்வரரை ஏறி தரிசிக்க போகும் காட்சியின் ஒளிவெள்ளம்தான் என்றும் செய்தி பரப்பி வருகிறார்கள்.

அய்யர்மலையில் சித்தர்கள் உலாவுவதாக பலகாலமாக பக்தர்களிடம் நம்பிக்கையுள்ளது. இந்நிலையில்,பக்தர் ஒருவர் செல்போனில் இப்படி சித்தர் ஒருவர் வானத்தில் இருந்து இறங்கி,கையில் லிங்கத்துடன் சிவனை வழிபட சென்றதாக சொல்வதை நம்புறதா என்னான்னே தெரியலை. இன்னும் சிலர்,'கோயிலுக்கு பக்தர்களின் கூட்டத்தின் வருகையை அதிகப்படுத்த கோயில் தரப்பே இப்படி,'கையில் லிங்கத்துடன் சித்தர்கள்..' என்ற கதையை கட்டிவிட்டதாகவும் சொல்றாங்க. எது உண்மைன்னே தெரியலை" என்றார்கள்.

 அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோயில் தரப்பில் விசாரித்தால், "அய்யர்மலையில் சித்தர்களின் நடமாட்டம் இருப்பது உண்மைதான். ஆனால்,அந்த ஒளிக்கீற்று விவகாரம் சுத்த பொய். அப்படி இருக்க,அதை பரப்பியதே நாங்கதான்னு சொல்றது கண்டிக்கத்தக்கது" என்றார்கள்.