வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (23/11/2018)

கடைசி தொடர்பு:04:00 (23/11/2018)

‘நெளிவு சுளிவுடன் நிதி கேட்பதா?’ - எடப்பாடி மீது துரைமுருகன் பாய்ச்சல்

‘மத்திய சர்காரிடம் நெளிவு சுளிவுடன் நிதி கேட்டால் கிடைக்காது. வணங்காமுடி மன்னனைப் போல் நிதி கேட்க தைரியம் வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமியை துரைமுருகன் சாடினார்.

துரைமுருகன்

வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘கஜா புயல் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள் இன்னும் கணக்கெடுத்து அறிவிக்கவில்லை. தஞ்சை உள்பட ஏழு மாவட்டங்களையும் புனரமைக்க பத்து ஆண்டுகளாகும். அவ்வளவு அழிவு. வயல்வெளிகளை இனி செப்பனிடவே முடியாது. மண்மேடாகியுள்ளது. பயிர்கள் அழிந்திருக்கிறது. ஆறுகள் திசை மாறி வீடுகள் அழிந்திருக்கிறது. மிகப்பெரிய துயரம். புயல் பாதிப்புகளில் நிதி கொடுப்பது மற்றும் பணி செய்வதில் கட்சி வித்தியாசம் இருக்கக் கூடாது. 

தஞ்சை மாவட்டத்தில் மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் அதிகம் இருக்காது. பெரும்பாலான பகுதி கூரை வீடுகள் தான். எல்லாம் படுமோசமாகியுள்ளது. மாலத்தீவுக்குச் சென்று வந்த பிரதமர், கேரளாவை எட்டியாவது பார்த்தார். ஆனால், இங்கு வரவில்லை. உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் கூட வந்து பார்க்கவில்லை. தமிழ்நாடு ஒன்று இருப்பதாகவே மத்தியில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. முதல்வர் நிதி கேட்க போவது பெருசல்ல. வணங்காமுடி மன்னனைப் போல் அதிகார தோரணையுடன் மத்திய சர்காரிடம் நிதி கேட்க வேண்டும். நெளிவு சுளிவு இருந்தால் நிதி கிடைக்காது. பளீர் என்று பேசுகிற தைரியம் வேண்டும்’’ என்றார்.