`கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை’ -துணை முதல்வர் | Farmers do not commit suicide due to the impact of the gaja storm - Deputy Chief Minister

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (23/11/2018)

கடைசி தொடர்பு:09:50 (23/11/2018)

`கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை’ -துணை முதல்வர்

'கஜா புயல் பாதிப்பால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை' எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், அரசின் சார்பில் மீட்பு மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இரண்டாவது முறையாக புதுக்கோட்டை வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், களமாவூர், கீரனூர், குளத்தூர், அருந்ததியினர் காலனி, அடப்பன்காரச்சத்திரம், திருவப்பூர் ஆகிய பகுதிகளில்  புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசினார். மீட்புப்பணிகளை நேரில் பார்வையிட்டு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.  கஜா புயல் மீட்பு நடவடிக்கை முன்னேற்றம்குறித்து அரசு அலுவலர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், `‘நிவாரணத் தொகைகள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்படும். அனைத்து குக்கிராமங்களுக்கும் 477 ஜெனரேட்டர்கள் மற்றும் 236 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர்விநியோகம் நடந்துவருகிறது. சுனாமிக்குப் பின்னர் அதிக அளவில் கஜா புயலால் சேதம் ஏற்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள்குறித்து, அரசியல் ஆதாயத்திற்காகச் சிலர் தவறான கருத்துகளை சித்திரிக்கின்றனர். அவர்கள் உண்மைக்கு மாறானவர்கள். விவசாயக் கடன் தள்ளுபடிகுறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து தமிழக அரசு முடிவு எடுக்கும். முதல்வர் பிரதமரை சந்தித்ததைத் தொடர்ந்து, மத்தியக் குழு சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டு கணக்கீடு செய்ய வர உள்ளது. மத்திய அரசு நாம் கோரிய நிதியைத் தரவில்லை என்றாலும், தமிழக அரசு தன் சொந்த நிதியைக் கொடுத்து மக்களை நிச்சயம் காப்பாற்றும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும்  தமிழக முதல்வர்  வந்து   மக்களைச்  சந்திப்பார். எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. மனசாட்சியின் படியே வேலைசெய்துவருகிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். இதுவரை கஜாபுயல் பாதிப்பால், விசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை'’ என்றார்.

கஜா புயலில் தனது வாழைத்தோட்டம் ஒட்டுமொத்தமாக அழிந்ததில், விவசாயி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவமும், தென்னை விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், துணை முதல்வரின் இந்தப் பேச்சு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.