வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (23/11/2018)

கடைசி தொடர்பு:10:50 (23/11/2018)

குமரி ‘பந்த்’ - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ரத்து!

குமரி மாவட்டத்தில், பாரதிய ஜனதா சார்பாக இன்று பந்த் அறிவிக்கப்பட்டிருப்பதால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொன். ராதாகிருஷ்ணன் -இமரியில் பந்த்

குமரி மாவட்ட எம்.பி-யும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றார். நிலக்கல் பகுதியில் அவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கேரள போலீஸார் அவரது காரை சோதனையிட்டனர். வி.ஐ.பி என்கிற முறையில் அவரது காரை மட்டும் உள்ளே செல்ல அனுமதிப்பதாகக் கூறிய போலீஸார், அவருடன் வந்த வாகனங்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதனால், அவர் அரசுப் பேருந்தில் பயணித்தார்.

கேரள போலீஸார் பொன்.ராதாகிருஷ்ணனை அவமரியாதை செய்துவிட்டதாக பா.ஜ-வினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையிலும், கேரள போலீஸாரின் அத்துமீறலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் இன்று ஒருநாள் மட்டும் குமரி மாவட்டத்தில் பந்த் நடத்தப்படும் என குமரி மாவட்ட பா.ஜ சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

மனோன்மணியம் சுந்தரனால் பல்கலைக்கழகம்

அதன்படி, இன்று காலை முதல் குமரி மாவட்டத்தில் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதனால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளரான சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’குமரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதால், பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

நாகர்கோயில்

அதனால், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குச் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதை கவனத்தில்கொண்டு, குமரி மாவட்டத்துக்கு மட்டும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் பின்னர் நடத்தப்படும். அதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.