வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (23/11/2018)

கடைசி தொடர்பு:10:30 (23/11/2018)

`விஞ்ஞான ரீதியாக முதல்வர் ஆய்வு' - ஸ்டாலின் கிண்டல்!

'விஞ்ஞான ரீதியாக கஜா புயலை முதல்வர் ஆய்வுசெய்துள்ளார்' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிண்டல்செய்துள்ளார். 

கஜா புயல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. புயல் பாதித்தபோது, சேதங்களைப் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் சாலை மார்க்கமாக இரண்டாவது நாளே சென்று பார்வையிட்டனர். ஆனால் முதல்வர் பழனிசாமியோ, புயல் முடிந்த நான்கு நாள்கள் கழித்தே சேதங்களைப் பார்வையிட்டார். அதுவும் ஹெலிகாப்டரில் சென்றுதான் பார்வையிட்டார். மொத்தம் இரண்டு மாவட்டங்களைப் பார்வையிட்டவர், வானிலையைக் காரணம் காட்டி மற்ற மாவட்டங்களைப் பார்வையிடவில்லை. இது, அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டதற்கு முதல்வரை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதற்கிடையே, டெல்லியில் நேற்று பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, ஹெலிகாப்டரில் சென்றது ஏன் என விளக்கமளித்தார். 

அதில், ``சாலை வழியாகச் சென்றால் அதை எப்படி முழுமையாகப் பார்வையிட முடியும். ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து, ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு மரங்கள் சாய்ந்தன, சேதங்கள் எவ்வளவு என்பதை முழுவதுமாகப் பார்வையிட்டோம். ஹெலிகாப்டரில் சென்று சேதங்களைப் பார்வையிட்டு, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையெல்லாம் பிரதமரிடம் வழங்கியுள்ளோம்" என்றவர், ``சாலை மார்க்கமாகச் சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களைப் பார்வையிட்டார். ஸ்டாலின் சென்று எந்த இடத்தில் புகைப்படம் எடுத்து வந்தார் சொல்லுங்கள் பார்ப்போம்"  என்று ஸ்டாலினை ஒப்பிட்டுப் பேசினார்.

முதல்வரின் இந்த விளக்கத்தைக் கிண்டலடித்துப் பேசியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். திருச்சியிலிருந்து இன்று காலை சென்னை வந்த அவர், ``ஹெலிகாப்டரில் சென்று விஞ்ஞான ரீதியாக, அறிவுபூர்வமாக கஜா புயலை முதல்வர் ஆய்வுசெய்துள்ளார். விஞ்ஞான ரீதியான ஆய்வின் அடிப்படையிலேயே ரூ.15,000 கோடி நிவாரண நிதி கேட்டுள்ளார். நிவாரண நிதி, மத்திய குழு கேட்டது எல்லாம் செய்தியாகவே வருகிறது. ஆனால், உண்மையாக வர வேண்டும். தி.மு.க சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க