வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (23/11/2018)

கடைசி தொடர்பு:11:45 (23/11/2018)

ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: குற்றால அருவியில் குளிக்கத் தடை!

நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

குற்றாலம் வெள்ளம்

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்துவருகிறது. அதனால், அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. வறண்டுகிடந்த குளங்களும் நிரம்பத் தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், விவசாயப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில், இன்று காலை வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக ஆய்குடியில் 55 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்துவருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. 

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான, 143 அடி உயரம்கொண்ட பாபநாசம் அணை ,தற்போது 120 அடியை எட்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி உயரமுள்ள மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் பெய்துவரும் மழையால், அந்த அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. 

இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அதனால், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்கிறார்கள். மெயின் அருவியில் அதிகாலை முதலாகவே தண்ணீர் அதிகரித்தது. பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட்டியதால், பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை உருவானது.

அதனால், அதிகாலை முதல் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள், குற்றால அருவியில் நீராடுவதற்காக வந்திருந்தனர். ஆனால், காவல் துறையினர் யாரையும் குளிக்க அனுமதிக்காததால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். சிலர் ஐந்தருவி, பழைய குற்றாலம் பகுதிக்குச் சென்று நீராடினார்கள்.