தொலைதூரக் கல்வி... தமிழகத்தில் நான்கு பல்கலைக்கழகங்களில் மட்டுமே அனுமதி, ஏன்?! | Only four state university permitted to run the distance education course in Tamil Nadu

வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (23/11/2018)

கடைசி தொடர்பு:12:36 (23/11/2018)

தொலைதூரக் கல்வி... தமிழகத்தில் நான்கு பல்கலைக்கழகங்களில் மட்டுமே அனுமதி, ஏன்?!

அனுமதி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், அனுமதிக்கப்பட்ட படிப்புகளை மட்டுமே தொலைநிலைப் படிப்பைப் படிக்க வேண்டும்

தொலைதூரக் கல்வி... தமிழகத்தில் நான்கு பல்கலைக்கழகங்களில் மட்டுமே அனுமதி, ஏன்?!

தமிழ்நாட்டில் தொலைதூரப் படிப்பை வழங்க நான்கு அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருக்கிறது பல்கலைக்கழக மானியக்குழு. அங்கீகாரம் பெறாத‌ கல்வி நிறுவனங்களிலும், அனுமதி பெறாத‌ படிப்புகளிலும் படிப்பவர்களுக்கு இனி எந்தச் சலுகையும் வழங்கப்பட மாட்டாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  

தொலைதூரப் படிப்பு

தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் 27 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இதில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தொலைதூரப் படிப்புகள் நடத்தி வருகின்றன. இதில் பல பல்கலைக்கழகங்களுக்கு, தொலைதூரப் படிப்பை நடத்த அனுமதி கிடைக்காதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரும்பாலான பல்கலைக்கழகங்களுக்கு தொலைதூரக் கல்வி வழியாக அதிகளவில் வருமானம் கிடைத்து வருகிறது. இதனால், நாட்டின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் கூட தனியார் அமைப்புகளுக்கு தொலைதூரக் கல்வி மையங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால், பணம் கொடுத்தால் தொலைதூரக் கல்வி வழியே தேர்ச்சியும், சான்றிதழும் பெற முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே தொலைதூரக் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை பெற்றுவந்தன. மேலும், பல‌ படிப்புகளை அறிமுகப்படுத்தி, அளவுக்கு அதிகமான மாணவர்களைச் சேர்த்தன. இதனால், உச்சநீதிமன்றம் தலையீட்டு, தொலைதூரக் கல்வியின் தரத்தை மேம்படுத்த, ஒரு குழு அமைக்க உத்தரவிட்டது. 

 

பல்கலைக்கழக மானியக்குழு தொலைதூரப் படிப்பு

இதன் அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தொலைதூரக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நீதிபதி ரெட்டி தலைமையிலான குழுவை அமைத்தது. இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு, தொலைநிலை படிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக மானியக் குழு, நாடு முழுவதும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் இதைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.

தொலைதூரப் படிப்பு

மேலும், ஆய்வுக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொலைதூரப் படிப்பை வழங்க அனுமதி வழங்குவதென முடிவெடுத்தது. அதன்படி, 2018-19 கல்வியாண்டில், தமிழ்நாட்டில் நான்கு அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்த அனுமதி கிடைத்துள்ளது. 

இதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் மூன்று படிப்புகள், சென்னைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் 30 படிப்புகள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 15 படிப்புகள், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் 82 படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருக்கிறது. அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகள் குறித்த விவரத்தை www.ugc.ac.in/deb தளத்தில் பார்க்கலாம்.

ஆனால், இந்த அனுமதியையும் மீறி, பல பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வியில் மாணவர்களைச் சேர்க்க விளம்பரம் செய்துவருகின்றன. இதைக் கருத்தில் கொண்ட பல்கலை மானியக்குழு, `அனுமதி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், அங்கீகாரம் பெறப்பட்டப் படிப்புகளை மட்டுமே வழங்க வேண்டும். மீறினால், கல்வி நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் படிப்புகளுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். மேலும், அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் பெற்ற சான்றிதழ் செல்லாது’ என எச்சரித்துள்ளது. 

எவ்வளவு எச்சரித்தாலும் கல்வி நிறுவனங்கள் விளம்பரம் செய்து கல்லா கட்டுவது குறையவில்லை. மாணவர்களிடையே போதுமான விழிப்புஉணர்வு இருந்தால் மட்டுமே தடுத்துநிறுத்த முடியும்.


டிரெண்டிங் @ விகடன்