வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (23/11/2018)

கடைசி தொடர்பு:13:00 (23/11/2018)

கஜா புயலில் பாதிக்கப்பட்ட கிராமத்தைத் தத்தெடுக்கும் பதிவுத்துறை சங்கங்கள்!

 கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட கிராமத்தைத் தத்தெடுக்க உள்ளதாக தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் மாநில தலைவர் முனைவர் பாலு, மாநிலப் பணி அலுவலர் சங்கத் தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``கஜா புயலின் கோரத் தாக்குதலுக்குள்ளாகி நம் தொப்புள்கொடி உறவுகள் இன்னும் கடும் சிரமத்தில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இருக்க வீடற்று, குடிக்க நீரற்று, உண்ண உணவற்று, உடுத்த உடையற்று துயரத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் பல்வேறு தரப்பினரும் உதவி செய்துகொண்டு இருந்தாலும், அந்த உதவிகள் சரியான தேவையைப் பூர்த்தி செய்யப்படவில்லை என்ற தகவல் உள்ளது. ஒரு சில கிராமங்களுக்கு யாரும் இதுவரை செல்லவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள்   வேலு, ரவிந்திரநாத் தெரிவிக்கின்றனர். எனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தமிழகப் பதிவுத்துறையில் உள்ள சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி மாநிலப் பணி அலுவலர் சங்கம், சார்பதிவாளர் சங்கம், அமைச்சுப் பணியாளர் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களும் இணைந்து பதிவுத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அதன் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் கிராமத்தைத் தத்தெடுப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

 
இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்காத ஏழை மக்கள் அதிகம் வாழும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அவர்களுக்கு உதவிகளைச் செய்ய முடிவு செய்துள்ளோம். அந்த கிராம மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது, 15 நாள்கள் அல்லது ஒரு மாதத்துக்குரிய உணவுகளை அந்த ஊரிலேயே சமைத்து வழங்குவது, அனைவருக்கும் குறைந்தபட்சம் 3, 4 உடைகள் வழங்குவது, விவசாயத்துக்குத் தேவையான கருவிகளை வாங்கிக் கொடுப்பது போன்ற நல்ல செயல் திட்டங்களைச் செயல்படுத்திட முடிவு எடுத்துள்ளோம். வரும் சனிக்கிழமை முதல் இந்த நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளன" என்றனர்.