வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (23/11/2018)

கடைசி தொடர்பு:13:50 (23/11/2018)

`விவசாயம் செய்ய இந்த மழை போதாது!' - கலங்கும் காஞ்சிபுரம் விவசாயிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த மழையால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆனால், போதிய அளவு மழை இல்லாததால் பெரும்பாலான ஏரிகளில் 25 சதவிகித நீர்கூட நிறையவில்லை.

மழை மதுராந்தகம் ஏரி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதாலும், அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகள் அதிகரித்துவிட்டதாலும் தண்ணீரின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதனால் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த மழையால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டு, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்களை பொதுப்பணித்துறையினர் கண்காணித்துவருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு

பொதுப்பணித்துறை வசம் உள்ள 924 ஏரிகளில், நத்தப்பேட்டை, வையாவூர், நின்னகரை, செம்பாக்கம், தாம்பரம், கடப்பேரி, கூடுவாஞ்சேரி ஆகிய ஏரிகள் மட்டுமே நிறைந்துள்ளன. 90 ஏரிகளில் பாதியளவு நீர் நிறைந்திருக்கிறது. 790 ஏரிகளில் 25 சதவிகிதத்துக்கும் குறைவாகவே நிறைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கியமான பெரிய ஏரிகளான தாமல், தென்னேரி, கொண்டங்கி, உத்திரமேரூர், பொன்விளைந்த களத்தூர், ஸ்ரீபெரும்புதூர், கொளவாய், மதுராந்தகம், மணிமங்கலம், காயார் ஆகிய எந்த ஏரியும்  முழுமையான கொள்ளளவை எட்டவில்லை. மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 27 அடியில் 14 அடி அளவில் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், தற்போது இருக்கும் தண்ணீரைக்கொண்டு விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அடுத்தடுத்து மழை பெய்தால் மட்டுமே ஏரிகள் நிறையும் என்ற நிலை உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க