`உங்கள் ஹோட்டலில் பாலியல் தொழில் நடக்கிறது' - போலீஸ் என மிரட்டி மாமூல் | Two younsters threatens hotel owner at chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (23/11/2018)

கடைசி தொடர்பு:15:14 (23/11/2018)

`உங்கள் ஹோட்டலில் பாலியல் தொழில் நடக்கிறது' - போலீஸ் என மிரட்டி மாமூல்

போலீஸ்

சென்னையில் விபசார தடுப்புப் பிரிவு போலீஸ் எனக் கூறி ஹோட்டல்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களிடம் மாதந்தோறும் மாமூல் வசூலித்த இரண்டு இளைஞர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.  

சென்னைக் கோயம்பேடு, இளங்கோ நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக சென்னை விபசார தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார், ரகசியமாக கண்காணித்தனர். சீருடையணியாமல் சென்ற போலீஸார், விடுதியில் பாலியல் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அதிரடியாக விடுதிக்குள் நுழைந்த போலீஸார், திருவொற்றியூரைச் சேர்ந்த வினோத் (32), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நரேஷ் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், 2 பெண்களை போலீஸார் மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாலியல் தொழில் புரோக்கர்களாக வினோத், நரேஷ் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சில ஹோட்டல்களுக்குச் சென்று, தங்களை விபசார தடுப்புப்பிரிவு போலீஸார் எனக்கூறி அறிமுகப்படுத்தியுள்ளனர். அப்போது, இந்த ஹோட்டலில் இங்கே பாலியல் தொழில் நடத்துவது எங்களுக்குத் தெரியும். ரெய்டு நடத்தாமல் இருக்க வேண்டும் என்றால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை எங்களுக்கு மாமூலாகத் தர வேண்டும்’’ என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன ஹோட்டல் உரிமையாளர்கள் ரூ.15,000 முதல் 50,000 ரூபாய் வரை மாமூல் கொடுத்துள்ளனர். வங்கி மூலமாகவே பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் எங்களிடம் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைதுசெய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். 

 இதற்கிடையில் சென்னையில் சில குறிப்பிட்ட ஹோட்டல்கள், லாட்ஜ்களில் பாலியல் தொழில் நடந்தது உறுதியாகியுள்ளது. இதனால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விபசார தடுப்புப் பிரிவு போலீஸார் வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும், சில போலீஸாரையும் பாலியல் தொழில் நடத்தியவர்கள் கவனித்துள்ளதாகத் தகவல் போலீஸ் உயரதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது. இதனால், அவர்கள் யார் என்ற பட்டியலை உளவுத்துறை, மாநகர நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாமூல் குற்றச்சாட்டில் சிக்கி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இடமாற்றினால் மட்டும் போதுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தச் சமயத்தில் மீண்டும் விபசார தடுப்புப் பிரிவு சிக்கலில் சிக்கியுள்ளது.