`மின்சாரமும் இல்லை, குடிநீரும் இல்லை!' - டெல்டா பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை கேட்கும் ஆசிரியர் | kaja cyclone - Teacher asking leave for students

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (23/11/2018)

கடைசி தொடர்பு:15:05 (23/11/2018)

`மின்சாரமும் இல்லை, குடிநீரும் இல்லை!' - டெல்டா பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை கேட்கும் ஆசிரியர்

கஜா

கஜா புயல், டெல்டா மாவட்டங்களைப் பெரும் சேதத்துக்கு உள்ளாக்கியுள்ளது. வீடுகளை முற்றிலும் அழித்தொழித்து, அங்கு வாழ முடியாத நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டது. அதனால், மக்கள் பள்ளிகளிலும் மண்டபங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பள்ளிகள் வழக்கம்போல இயங்க வேண்டுமே என்ற சூழல் வருவதுகுறித்த பேச்சும் தொடங்கிவிட்டது. இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியரும் கல்வியாளர் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சி.சதீஷ்குமார் பேசியபோது, 

கஜா சதீஷ்குமார் "கஜா புயல் பாதித்த இடங்களுக்குச் சென்றுவந்தேன். பல இடங்களில் இன்னும் மின்சாரமே அளிக்கப்படவில்லை. இப்படி ஒரு நிலை வரும் என்று காவிரி டெல்டா மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இதை ஓரளவாவது சீரமைக்க, தன்னார்வ அமைப்புகள், முழு வீச்சோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றன. அவர்களில் ஆசிரியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களைப் பாதிப்பிலிருந்து விரைவில் மீட்டெடுக்கவும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு, நவம்பர் 30 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்து, ஆசிரியர்கள் அனைவரையும் களப்பணிக்கு ஈடுபடுத்திக்கொள்ளவும், பள்ளிகளைப் புனரமைப்பு செய்திடவும் வாய்ப்பு வழங்க வகைசெய்து, முதல்வர் உள்ளிட்ட அரசு பொறுப்பில் உள்ளவர்கள் முன்வர வேண்டும். பள்ளிகளில் விழுந்துகிடங்கும் மரங்களை அகற்றுவதுதான் தற்போதைய முதன்மைப் பிரச்னையாக இருந்தாலும், அதைச் சமாளித்துவிட முடியும். ஆனால் மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு வருதல் என்பது மிகச் சவாலானது. குடிதண்ணீரும், உணவு சமைத்தலும், கழிப்பறை உபயோகமும் அடிப்படைப் பிரச்னைகள். அதனால், இதைக் கவனத்தில்கொண்டு சரியான நடவடிக்கை எடுத்தால் உதவியாக இருக்கும்" என்கிறார்.