அரசு டீச்சர் வேலைக்கு 6 லட்சம் ரூபாய்!- சிக்கிக்கொண்ட அ.தி.மு.க இளைஞரணிச் செயலாளர் | ADMK cadre caught in police

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (23/11/2018)

கடைசி தொடர்பு:15:40 (23/11/2018)

அரசு டீச்சர் வேலைக்கு 6 லட்சம் ரூபாய்!- சிக்கிக்கொண்ட அ.தி.மு.க இளைஞரணிச் செயலாளர்

 டீச்சர் வேலைக்கு பணம் வாங்கி கைதான அதிமுக பிரமுகர்

சென்னையில், டீச்சர் வேலை வாங்கித்தருவதாக பல லட்சங்களை ஏமாற்றிய அ.தி. மு. க பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தி.நகர் ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் அஜந்தா ஜான். இவர், சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், ``தன் உறவினர் ஒருவருக்கு அரசுப் பள்ளியில் டீச்சர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அண்ணாநகரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சில மாதங்களுக்கு முன் ரூ.6 லட்சம் வாங்கினார். இவர் மாவட்ட அ.தி.மு.க இளைஞரணிச் செயலாளராக உள்ளார். பணத்தை வாங்கிய அவர், வேலை வாங்கித்தராமல் ஏமாற்றிவந்தார். பலமுறை அவரிடம் பணத்தை கேட்டபோது கடந்த அக்டோபர் மாதம் ரூ.4 லட்சத்து 60,000 மட்டும் திருப்பி கொடுத்தார். இந்த நிலையில், மீதி ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார். பணத்தைக் கேட்டால் அவர், ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின்பேரில் போலீஸார், காமராஜிடம் விசாரணை நடத்தினர். பிறகு அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.