`அங்கமுத்து தற்கொலையை ஆளுநர் விசாரிக்கணும்!' - பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் | The governor should investigate the angamuthu suicide case, says professors

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (23/11/2018)

கடைசி தொடர்பு:16:15 (23/11/2018)

`அங்கமுத்து தற்கொலையை ஆளுநர் விசாரிக்கணும்!' - பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள்

பெரியார் பல்கலைக்கழகம்

ஆளுநர்

எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலைக்கு முன் தான் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக அவர்களுக்கு தற்போது ஆளுநர் வரவேற்புக் குழுவில் இடம்பெறச் செய்திருப்பது பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ``பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமன கோப்புகள் காணாமல் போனதற்கு முன்னாள் பதிவாளர் அங்கமுத்துதான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென 18.12.2017 அன்று தன்னுடைய வீட்டில் அவர் தற்கொலை செய்துகொண்டார். அதையடுத்து காவல்துறையினர் அவருடைய தற்கொலை வாக்குமூலத்தைக் கைப்பற்றினார்கள்.

குழந்தைவேலு

அந்த வாக்குமூலத்தில், கோப்புகள் காணாமல் போனதற்கும், என் மரணத்துக்கும் காரணமானவர்கள் என்று முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், முன்னாள் பதிவாளர் மணிவண்ணன், டீன் கிருஷ்ணகுமார், பதிவாளரின் நேர்முக உதவியாளர் நெல்சன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவல கண்காணிப்பாளர் குழந்தைவேலு, பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் இராஜமாணிக்கம், ஶ்ரீதர் என ஏழு பேரின் பெயர்கள் குறிப்பிட்டிருந்தார்.

அங்கமுத்து மரணமடைந்து ஒரு வருடம் நெருங்கும் நிலையில் இவர்கள் மீது கண்துடைப்புக்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், சுவாமிநாதனும், மணிவண்ணனும் தற்போது பல்கலைக்கழகத்தில் இல்லை. மற்றவர்கள் பல்கலைக்கழகத்தில் பணியில் இருக்கிறார்கள். வரும் 27-ம் தேதி பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. அதற்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வர இருக்கிறார். அவரை வரவேற்கும் குழுவிலும், மற்ற முக்கிய குழுவிலும் இவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பட்டமளிப்பு விழாவுக்கு வரும் ஆளுநர், அங்கமுத்து மரணம் பற்றி விசாரித்து பணி நியமன கோப்புகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள்.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலிடம் கேட்டதற்கு, ``அங்கமுத்து மரணத்தைக் காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் கடிதத்தில் பெயர் எழுதிவிட்டு இறந்து போனதற்காக இவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியுமா. அப்படிப் பார்த்தால் உலகத்தில் யாரும் வேலை செய்ய முடியாது. பல வருடங்களாக அவர்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார்கள். ஆளுநர் வருகையின்போது அவரவர்கள் எந்தக் குழுவில் இருந்தார்களோ அதே குழுவில் இருந்து பணியாற்றுகிறார்கள்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க