இடைத்தரகர்கள் கிடையாது; நேரடியாகப் பேசலாம்!' - முருங்கை விவசாயிகளுக்கு கருத்தரங்கம் | Seminar for moringa farmers without middlemen

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (23/11/2018)

கடைசி தொடர்பு:18:13 (23/11/2018)

இடைத்தரகர்கள் கிடையாது; நேரடியாகப் பேசலாம்!' - முருங்கை விவசாயிகளுக்கு கருத்தரங்கம்

லகின் சூப்பர் ஃபுட் முருங்கை என்றால் அது மிகையல்ல. மருத்துவர்களால் பல நோய்களுக்குப் பரிந்துரைக்கப்படும் கீரைகளில் முக்கியமானதும் முருங்கைதான். முருங்கையில் பல சத்துக்கள் இருப்பதே அதற்குக் காரணம். பொதுவாகவே உலக அளவில் முருங்கைக்கு அதிக அளவு டிமாண்ட் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டு முருங்கைக்குத்தான் அதிக டிமாண்ட். இம்முருங்கை விதைகளை எடுத்து ஆப்பிரிக்காவிலும் முருங்கை உற்பத்தி நடக்கின்றன. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் முருங்கைக்கான விழிப்பு உணர்வு போதிய அளவில் இல்லை. இந்த நிலையில், வரும் டிசம்பர் 20 முதல் 22-ம் தேதி வரை முருங்கையை முன்னிறுத்தி கருத்தரங்கமும், கண்காட்சியும் கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கமலஹாசனன் பிள்ளையிடம் பேசினோம். 

``முருங்கை பொதுவாகவே வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதியாகும் ஒரு மருந்துப் பொருள். இதற்கான பலன் தமிழக மக்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை. இன்னும் நாம் 15 ஆண்டுகள் பின்தங்கித்தான் இருக்கிறோம். உலகச் சந்தைக்கு இன்னும் நாம் செல்லவில்லை. அதற்காக முன்னெடுக்கப்படும் முக்கியமான கருத்தரங்கம்தான் இது. இக்கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, ஸ்டெல்லா மாரிஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் செயல்பட்டு வரும், முருங்கைக்கான சிறப்பு மையம் நடத்துகிறது. இக்கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகளில் இடைத்தரகர்கள் இருக்க மாட்டார்கள். நேரடியாக விவசாயிகள் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில வியாபாரிகளைச் சந்தித்துப் பேசிக்கொள்ளலாம். இதன் மூலமாக தங்கள் முருங்கைக்கான நிலையான வருமானத்தை உண்டாக்கிக்கொள்ள முடியும். இதற்காக முருங்கை அசோசியேஷன் உருவாக்க இருக்கிறோம். இந்நிகழ்ச்சியை நபார்டு, சிறுபான்மை நலத்துறை அமைச்சகம், தோட்டக்கலைத் துறை ஆகியவை தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. 

முருங்கைக்காக அகில இந்திய அளவில் நடைபெறும் முதல் கருத்தரங்கம் இதுதான். இதற்காக முன்பதிவு செய்வது அவசியம். இதற்கான முன்பதிவுக்கு ஸ்டெல்லா மாரிஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவன வலைதளத்தைத் தொடர்புகொள்ளலாம். கருத்தரங்கம், டிசம்பர் 20, 21,22 - ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருக்கும் சிங்கார் இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. முருங்கை கண்காட்சி டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை, கன்னியாகுமரி ஸ்டெல்லா மாரிஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவன (stella maris institute of development studies) வளாகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான சந்தேகங்களை smids2015@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேட்கலாம்" என்றார்.