கஜா நிவாரணத்துக்கு சேமிப்புப் பணத்தைக் கொடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்! #CycloneGaja | Ramnad school students give their savings to cyclone Gaja relief

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (23/11/2018)

கடைசி தொடர்பு:17:57 (23/11/2018)

கஜா நிவாரணத்துக்கு சேமிப்புப் பணத்தைக் கொடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள்! #CycloneGaja

கஜா புயல் ஏற்படுத்திய தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ பள்ளிக் குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கஜா புயல் நிவாரணமாக சேமிப்பு தொகையை வழங்கிய மாணவர்கள்

கடந்த வாரம் வீசிய கஜா புயலில் புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்து போயின. இம்மாவட்டத்தினைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து வாழ வழியின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட நிவாரண உதவிகள் இம்மாவட்டங்களுக்கு 4 கட்டங்களாக அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 25 லட்சம் பெறுமானம் உள்ள உதவிகள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தினால் புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் ராமநாதபுரத்தை அடுத்துள்ள பேராவூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையினை கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். இப்பள்ளியில் பயிலும் 69 மாணவ மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.2,900-ஐ பள்ளித் தலைமை ஆசிரியர் காளீஸ்வரி மூலம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் வழங்கினர்.

முன்னதாக விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்று இருந்த மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் நிவாரண நிதி அளிக்க வந்திருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாணவர்களை அழைத்து வரச் செய்து அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு முன்பாக வைத்து மாணவர்கள் அளித்த நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்டார். மாணவர்களின் இந்த உதவும் நோக்கத்தை மாவட்ட ஆட்சியர் பாராட்டியதுடன், அங்கு இருந்த விவசாயிகள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.