`எவ்வளவு பணம் கொடுப்பீங்க?' - கூட்டத்தில் ஓ.பி.எஸ்ஸை திட்டித்தீர்த்த எம்.பி, எம்.எல்.ஏ | MP MLa's slams O Paneerselvam in meeting

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (23/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (23/11/2018)

`எவ்வளவு பணம் கொடுப்பீங்க?' - கூட்டத்தில் ஓ.பி.எஸ்ஸை திட்டித்தீர்த்த எம்.பி, எம்.எல்.ஏ

கடந்த 16-ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள், இதுவரை கண்டிராத சேதத்தை சந்தித்து இருக்கின்றன. அவர்களுக்கு தேவையான உதவிகள், பல்வேறு தளங்களில் இருந்து சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தேனி மாவட்ட அ.தி.மு.க சார்பில் பணம் வசூல் செய்து புயல் பாதித்த மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு நேற்று கூட்டப்பட்ட கூட்டத்தால், தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்

தேனி மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சையதுகான் தலைமையில் நடந்த கஜா புயல் உதவி ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அக்கூட்டத்துக்கு அவர் வரவில்லை. கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கட்சி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  ``கூட்டத்துக்கு வாருங்கள், அண்ணன் (ஓ.பி.எஸ்.!) வரச்சொன்னார். என்று மட்டுமே அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு வந்த பிறகுதான் கஜா புயல் நிதி திரட்டும் கூட்டம் என்று புரிந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்தனர். கூட்டத்தின் நோக்கத்தை மாவட்டச் செயலாளர் சொன்னதும் கூட்டத்தில் சலசலப்பு உருவானது. ``கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக, எங்களுக்கு எந்த காண்ட்ராக்ட் வேலைகளையும் ஓ.பி.எஸ் கொடுக்கவில்லை. கட்சிக்காரர்களுக்கு வருமானம் தேடிக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்றெல்லாம் இதுவரை நினைத்தது இல்லை. எல்லாமே அவருக்கு மட்டும்தான் சேர வேண்டும் என்று தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என பேசினர்.

அப்போது, `எம்.எல்.ஏ இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும். எம்.பி இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும். ஒன்றியச் செயலாளர்கள் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்' என மாவட்டச் செயலாளர் சையதுகான் கூறியதுமே பிரச்னை ஆரம்பித்துவிட்டது. முதல் ஆளாக, ஓ.பன்னீர்செல்வத்தை கண்டபடி திட்டிவிட்டு கூட்டத்தைவிட்டு வெளியேறினார் கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன். அவரைத் தொடர்ந்து எம்.பி பார்த்திபனும் வெளியேற, மற்ற நிர்வாகிகள் ஒவ்வொருவராக தங்கள் நிலைமையை கூறிவிட்டுக் கூட்டத்தை விட்டுச் சென்றுவிட்டனர்.” என்றார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ``கஜா புயல் நிவாரண உதவிக்காக, தேனி மாவட்டத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பம். அதற்காக கூட்டப்பட்டதுதான் அந்தக் கூட்டம். ஆனால், பிரச்னை வெடித்துக் கூட்டம் கலைந்தது. இந்த விவகாரத்தில் ரொம்பவே அப்சட்டில் இருக்கிறார் ஓ.பி.எஸ்” என்றனர்.

`அரசு காண்ட்ராக்ட்கள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு கிடைக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்டு வருவதனால், கடும் அதிருப்தியில் இருந்துவரும் ஓ.பி.எஸ், அதன் விளைவுகளை தற்போது நேரடியாக சந்தித்துவருகிறார். தன் பின்னால் நின்றவர்கள், ஒவ்வொரு ஆளாக தன்னை எதிர்க்கும் நிலை உருவாகிவருவதை அவர் நன்கு அறிவார்'' என்று கிசுகிசுக்கிறார்கள் தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரங்கள்.