ரூ.10.5 கோடி வருமான வரி செலுத்தாத விவகாரம்... ரத்னா ஸ்டோர்ஸ் பங்குதாரர்களுக்கு வாரன்ட்! | warrant for rathna stores

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (23/11/2018)

கடைசி தொடர்பு:20:05 (23/11/2018)

ரூ.10.5 கோடி வருமான வரி செலுத்தாத விவகாரம்... ரத்னா ஸ்டோர்ஸ் பங்குதாரர்களுக்கு வாரன்ட்!

10.5 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்தாத காரணத்தால் ரத்னா ஸ்டோர்ஸ் பங்குதாரர்களுக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரத்னா ஸ்டோர்

கடந்த 26.09.18 அன்று 'ரத்னா ஸ்டோர்ஸுக்கு என்ன ஆச்சு?' டென்ஷனில் வியாபாரிகள் என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். சென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று. திருநெல்வேலியிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த கடை அது. நம்பிக்கை, கைராசி, சென்டிமெண்ட் என்கிற வகையில் வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் விற்பனையில் கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பாக வீட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமான கடை அது. 72 வருடம் பாரம்பர்யம் கொண்டது. சென்னையில் பாண்டிபஜார், தாம்பரம், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், வடபழனி, கே.கே.நகர் மற்றும் திருச்சியில் ஒரு கடை..இப்படி பல கடைகள் இயங்கி வந்தன.

இவற்றில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். ரத்னா ஸ்டோர்ஸுடன் பிசினஸில் ஆயிரக்கணக்கான டீலர்கள் இருந்து வந்தனர். சமீப காலமாக இந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக வங்கிகள் தரபில் குற்றம்சாட்டுகின்றனர். டீலர்கள் தரப்பிலும் பண வரவு முன்பு போல இல்லை என்று புலம்பி வருகிறார்கள். இந்த நிலையில், சொத்து, கடன்களை கணக்கெடுத்து செட்டில் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை நிர்வகிக்க லிக்கிவிடெட்டர் (கடனை அடைக்கும் வகையில் கணக்குகளை சரிபார்க்கும் சிறப்பு அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மத்திய வருவாய்துறை அதிகாரிகள் ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நடந்துவரும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வருமான வரி சரியாக செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் கிளம்பியது. இதுதொடர்பாக வரிமானவரித்துறையினர் தனியாக விசாரித்து வந்தனர். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ரத்னா ஸ்டோர்ஸின் பங்குதாரர்களில் மூவர் மீது எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். ரூ.10.50 கோடி வருமான வரி செலுத்தாத இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை நடந்தது. அதுசமயம், ரத்னா ஸ்டோர்ஸ் தரப்பினர் ஆஜர் ஆகாமல் இருந்துள்ளனர். இதை வருமான வரித்துறையினர் நீதிபதியிடம் சுட்டிக்காட்ட.. ரத்னா ஸ்டோர்ஸின் பங்குதாரர்கள் ரவிசங்கர், கிருஷ்ணகுமார், பெரியபிராட்டி..ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வாரன்ட்டை நீதிபதி மலர்மதி பிறப்பித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க