வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (23/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (23/11/2018)

`நாங்க இருக்கோம்; பயம் வேண்டாம்!’ - தெம்பு கொடுத்த அரசுப் பள்ளி மாணவர்கள் #RestoreDelta

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து நிவாரண உதவிகள் செய்துள்ளனர்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்கள் உணவு, உடை இருப்பிடம் என அடிப்படை வசதிகளுக்காகவே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டு வருகின்றன. 

அந்தவகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கைகொடுத்திருக்கிறார். ஆர்.புதுப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 156 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவ - மாணவியர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது பங்களிப்பை வழங்கும் வகையில் கிராம மக்களிடம் நிதி திரட்டும் பணியில் இன்று ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள் தங்களது சேமிப்புத் தொகையையும் சேர்த்து மொத்தம் 4,444 ரூபாய் நிதியை திரட்டினர். இந்த நிதி பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

இதுகுறித்து தலைமையாசியர் மகேஸ்வரியிடம் பேசினோம். ``நம்முடைய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி உறுப்பினர்கள் கொடுத்த நிதி மற்றும் 720 சதுரஅடி கொண்ட இரண்டு தார் பாய்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கொடுக்கப்பட்டது’’ என்றார். மேலும், `ரூ.7,000 மதிப்புகொண்ட அந்த தார்பாய்களை வேதாரண்யம், நாகப்பட்டினம் பகுதிகளில் ஓடுகள் சரிந்து இருக்கும் பள்ளிகளுக்கு இதைப் பயன்படுத்துவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உறுதியளித்துள்ளார்’ என்றும் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க