பினராயி விஜயன் உருவபொம்மை எரிப்பு - டெல்லியில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்! | BJP staged protest against Kerala CM pinarayi vijayan in New Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (23/11/2018)

கடைசி தொடர்பு:22:45 (23/11/2018)

பினராயி விஜயன் உருவபொம்மை எரிப்பு - டெல்லியில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்!

 

பினராயி விஜயன்

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமதித்ததாக, கேரள மாநிலம் நிலக்கல் கண்காணிப்பாளர் யதீஷ் சந்திராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் உள்ள கேரளா இல்லம் முன்பு தென்னிந்திய பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சமீபத்தில் சபரிமலைக்குச் சென்றிருந்தார். அப்போது சபரிமலை செல்லும் வழியில் பொது வாகனங்கள் செல்லத் தடையிருப்பதாகச் சில காரணங்களைக் கேரள காவல்துறை கண்காணிப்பாளர் யதீஷ்சந்திரா எடுத்துரைத்தார். பொன்.ராதாகிருஷ்ணனுடன் யதீஷ் சந்திரா விவாதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதைக் கண்டித்து, டெல்லியில் உள்ள கேரள இல்லத்தை முற்றுகையிடுவதாக பா.ஜ.க-வின் தென்னிந்தியப் பிரிவு அறிவித்தது. இன்று (நவம்பர் 23) மாலை 4.30 மணியளவில் ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து கேரள இல்லம் நோக்கி பா.ஜ.க-வினர் பேரணியாக வந்தனர். இப்போராட்டத்தை டெல்லி மாநிலப் பா.ஜ.க பொதுச் செயலாளர் குல்ஜித் சிங் சாஹல் முன்னின்று நடத்தினார். கேரள மாநில அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியவண்ணம் வந்த அவர்கள், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் முகத்தைக் கோர முகமாக போட்டாஷாப் செய்த காகிதங்களைக் கையில் ஏந்தி இருந்தனர். மேலும், பினராயி விஜயனின் உருவபொம்மையை எரித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பின், சிறிது நேரம் கோஷங்களை எழுப்பிய அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைவிட அவர்களைக் கட்டுப்படுத்த குவிக்கப்பட்ட போலீஸ் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. கேரள இல்லத்துக்கு பாதுகாப்புக்காக பேரிகேட் போடப்பட்டிருந்தது. அதை முற்றுகையிடும் முயற்சியை யாரும் எடுக்கவில்லை. கேரள போலீஸ் ஒழிக எனக் கோஷம் எழுப்பிய ஒருவர், நிறைவில் `டெல்லி போலீஸ் கி ஜே!’ என புகழ்ந்து சென்றார். கேரளாவில் நடந்த சம்பவத்துக்கு தேசிய அளவிலான கவனத்தை ஈர்ப்பதற்காக, தலைநகர் டெல்லியில் எதிர்வினையாற்றியிருக்கின்றனர் பா.ஜ.க-வினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க