தொடர் கனமழை: நாகை, திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!  | Heavy rain school, college shutdown today

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:07:00 (24/11/2018)

தொடர் கனமழை: நாகை, திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! 

தொடர் கனமழை காரணமாக நாகை, திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மழை

தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தபோது, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்தது. இதன் காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். விவசாயப் பயிர்கள் பாழடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டோருக்கு பல தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. 

கடுமையான சேதத்துக்கு உள்ளான மாவட்டங்களில் மறு சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தன்னார்வலர்கள் பலரும் இதற்காகக் களமிறங்கி, செயலாற்றி வருகின்றனர். ஆனாலும், மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் ஓரிரு வாரங்கள் தேவைப்படலாம். இந்நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

இதனையடுத்து, இவ்விரு மாவட்டத்திலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (24.11.2018) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோன்று தருமபுரியிலும் கன மழையால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.