வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (24/11/2018)

கடைசி தொடர்பு:08:30 (24/11/2018)

அரிசி ஆலை வரைபடத்துக்கு ரூபாய் இரண்டரை லட்சம் லஞ்சம் -பள்ளிப்பட்டு பேரூராட்சி  செயல் அலுவலர் கைது

கைது

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரிசி ஆலை அமைக்க வரைபட அனுமதிக்காக ராஜகோபால் என்பவர் பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில்  விண்ணப்பம் செய்திருந்தார். இதுதொடர்பாக அந்த அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பரந்தாமன் என்பவரிடம் ராஜகோபால் அணுகி இந்த பணியை விரைவில் முடித்து தர வலியுறுத்தினார். இந்த பணி வேகமாக நடத்தி தர வேண்டும் என்றால் இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று  பரந்தாமன் ராஜகோபாலிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு ராஜகோபால் பணம் தர சம்மதம் தெரிவித்தார். ஆனால் உடனடியாக வேலையை முடித்துத் தரவேண்டும் என்று ராஜகோபால் கோரிக்கை வைத்தார். உடனடியாக வேலை தொடங்க வேண்டுமென்றால் முன் பணமாக ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று பரந்தாமன் ராஜகோபாலிடம் கேட்டுள்ளார்.

 இந்நிலையில் ராஜகோபால் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சிவபாலசேகரிடம்  புகார் அளித்தார். அதன்படி இன்று மதியம் 12 மணியளவில் ராஜகோபால் இளநிலை உதவியாளர் பரந்தாமன் மற்றும் செயல் அலுவலர்  ஜானகிராமனிடம் பணத்தை  கொடுக்கும்போது  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் சுமார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு இருவரையும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மணி அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆகிய பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் வேட்டை நடத்தி வருகின்றனர். கடந்த  மாதம் ஆர்.கே.பேட்டை வேளாண்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.