"தென்னைக்கு 25,000 ரூபாய் கொடுத்தாதான் மீண்டு வரமுடியும்!" - விவசாயி சங்கர் அஸ்வின் #RestoreDelta | Farmers demand Rs.25,000 per coconut tree... the effect of Gaja Cyclone!

வெளியிடப்பட்ட நேரம்: 08:05 (24/11/2018)

கடைசி தொடர்பு:08:05 (24/11/2018)

"தென்னைக்கு 25,000 ரூபாய் கொடுத்தாதான் மீண்டு வரமுடியும்!" - விவசாயி சங்கர் அஸ்வின் #RestoreDelta

எங்கோ நிலத்துக்கு அடியில் நீர் தேடி வேர் பாய்ச்சி உறிஞ்சியெடுத்து, உச்சந்தலையில் உள்ள தேங்காய்க்கும், தென்னங்குருத்துக்கும் செலுத்தி வளரவைக்கும் தென்னை வேர்போல, புனல்வாசல் போன்று பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும் அரசின் உதவிகள் போதுமான அளவிற்குச் சென்றுசேர வேண்டும்.

``தென்னை மரங்கள் இருந்தவரை எங்களை நம்பி தேங்காய் வியாபாரிகள் கடன் தந்தார்கள். இனி எந்த நம்பிக்கையில் கடன் தருவார்கள்? தற்போதைய பேரிழப்பிலிருந்து மீண்டுவர அரசு உதவியை எதிர்பார்ப்பதைத்தவிர வேறுவழியில்லை" என்று வருந்துகிறார்கள் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புனல்வாசல் கிராம தென்னை விவசாயிகள். 

தென்னை

காவிரி டெல்டா பகுதியான பட்டுக்கோட்டை தாலுகாவில் சுமார் 1,300 வீடுகளும், 12,000 மக்களையும் கொண்டது புனல்வாசல் கிராமம். பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதித்தாலும், சம்பாதித்த பணத்தையும் விவசாயத்திலேயே முதலீடு செய்கிறார்கள். காவிரிப் பிரச்னையின் காரணமாகக் காவிரி ஆற்றுப் பாசனம் கேள்விக்குறியானதால், பெரும்பாலானவர்கள் தென்னம்பிள்ளைகளை நட்டு வளர்க்கத் தொடங்கினர். அந்தத் தென்னை மரங்கள்தான் தற்போது கஜா புயலால் சூறையாடப்பட்டு, இப்பகுதி மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளுமே பெரும்பான்மையாக உள்ள இந்தக் கிராமத்தில், பல வீடுகள் மொத்தமாகத் தரைமட்டமாகிவிட்டன. மரங்கள் ஒடிந்துவிழுந்ததால் பல வீடுகளில் மேற்கூரை இடிந்து பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இடிந்த வீட்டைச் சரிசெய்வதா, வேரோடு சாய்ந்திருக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்துவதா என விரக்தியில் இருக்கிறார்கள் மக்கள். இந்தச் சூழலில்தான் தங்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் தராமல் பாராமுகமாக இருக்கும் அரசை எதிர்த்து மறியலில் ஈடுபட்டு தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களைச் சமாதானப்படுத்த வந்த அதிகாரிகள், மேம்போக்காக ஒடிந்துகிடந்த தென்னை மரங்களைப் பார்வையிட்டு, 4,000 தென்னை மரங்கள் மட்டும் வீழ்ந்துள்ளதாகக் கணக்கெடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், `வீழ்ந்த மரங்களின் எண்ணிக்கை 40,000 இருக்கும்’ என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த சிறு விவசாயி சங்கர் அஸ்வின். 

சங்கர் அஸ்வின்புனல்வாசல் கிராமப்பகுதியில் ஏற்பட்ட இழப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, "காவிரிப்பாசானம் கைவிட்டாலும் எங்க பகுதி மக்கள் விவசாயத்தை மட்டும் கைவிடவேயில்லை. விலைத்தண்ணீர் வாங்கி விவசாயம் பார்த்து தென்னம்பிள்ளைகளை வளர்த்துட்டு இருந்தோம். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கு முன்ன வைத்த தென்னை மரங்கள் இங்கே அதிகம். எனக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. முன்ன நெல் பயிரிட்டிருந்தேன். விலைத்தண்ணீர் கட்டுபடியாகாமல் ஒரு வருஷத்துக்கு முன்னதான் நானும் தென்னம்பிள்ளை நட்டேன். வயல் வரப்புல கருங்காலி, தேக்கு, சந்தனம், புளிய மரம்னு வளர்த்தேன். அத்தனையும் அந்த ஒருநாள் ராத்திரியில மொத்தமா சாஞ்சிருச்சு.  ஊரைச் சுத்தி எங்க பார்த்தாலும் தென்னை மரங்கள்தான் பெருமளவு தூரோடு சாஞ்சு, பாதியாக முறிஞ்சு கிடக்கு. 

நாங்க நண்பர்கள் சேர்ந்து பாரதி நற்பணி மன்றம் வச்சிருக்கோம். எங்க ஊருக்கு வரும் ரோட்டுல 8 கிலோமீட்டர் தூரத்துக்கு விழுந்து கிடந்த தென்னை மரங்களை அறுத்து, வழி ஏற்படுத்திக் கொடுத்தோம். ஒடிஞ்சுவிழுந்த ஒரு தென்னை மரத்துக்கு 1,100 ரூபாய், புதுசா தென்னம்பிள்ளை நடுறதுக்கு 412 ரூபாய் தர்றதா அரசாங்கம் அறிவிச்சிருக்கு. ஆனா, இந்த உதவி எங்க விவசாயிகள் மீண்டுவர உதவாது. மரங்களை அப்புறப்படுத்தவே வெட்டுக்கூலியா சின்ன தென்னை மரங்களுக்கு 1,000, பெரிய மரங்களுக்கு 2,000, புளிய மரம், கருங்காலி மரத்துக்கு 4,000 ரூபாய்  கேட்கிறாங்க. வெட்டிவந்ததை வித்தாலும் பெருசா கிடைக்காது. ஆக, அரசாங்கம் கொடுக்குற பணம் வெட்டுக்கூலிக்கே பத்தாது. ஒடிஞ்சு விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினாதான் மேற்கொண்டு விவசாயம் பத்தி யோசிக்கவே முடியும். அரசாங்கம் ஒரு மரத்துக்கு 15,000 முதல் 25,000 வரை கொடுத்தாதான் எங்களால மீண்டு வரமுடியும். இப்ப எங்களை நம்பி யாரும் கடன் தரமாட்டாங்க. ஏற்கெனவே வாங்கிய கடனையும் அடைச்சாகணும். 

நாங்க தென்னையை நட்டாலும், செலவுக்கு பணம் சம்பாதிக்க வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ போனால்தான் அடுத்த பத்து வருஷத்துக்கு குடும்பம் நடத்த முடியும். நானும் பல வருஷம் வெளிநாட்டில் வேலைபார்த்துட்டு இப்பதான் தீவிரமா விவசாயத்தில் இறங்கணும்னு இங்க வந்தேன். இயற்கை என்னை மீண்டும் வெளிநாட்டுக்குத்தான் துரத்துது. இன்னும் நிவாரணப்பணியே எங்க கிராமத்தில் தொடங்கலை. அவ்வளவு சீக்கிரம் கரன்ட் கம்பங்களை சரிசெய்ய முடியாது. குறைஞ்சது ஒரு மாசமாகும்.

கஜா

எங்கள் பகுதி மக்களுக்கு உடனடித்தேவையாக, உடைந்த வீட்டின் மேல் போர்த்த தார்ப்பாய், பெரியவர்களை, குழந்தைகளைக் கொசுக்கடியிலிருந்து காப்பாற்றக் கொசுவலை, தீப்பெட்டி, மண்ணெண்ணெய், அரிசி, மளிகைசாமான்கள், டீத்தூள், பால் பவுடர், சார்ஜர் வசதி போன்றவற்றை அரசாங்கம் ஏற்பாடு செய்யணும். இப்போதைக்கு சில தன்னார்வத்தொண்டு நிறுவனங்கதான் அடிப்படைத்தேவைகளுக்கு உதவி செய்றாங்க. இன்னும் கவர்ன்மென்ட் உதவி எங்களுக்கு வந்து சேரலை" என்றார் விரக்தியாக...

எங்கோ நிலத்துக்கு அடியில் நீர் தேடி வேர் பாய்ச்சி உறிஞ்சியெடுத்து, உச்சந்தலையில் உள்ள தேங்காய்க்கும், தென்னங்குருத்துக்கும் செலுத்தி வளரவைக்கும் தென்னை வேர்போல, புனல்வாசல் போன்று பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும் அரசின் உதவிகள் போதுமான அளவிற்குச் சென்றுசேர வேண்டும். கார்ப்பரேட்களுக்கு கடனை ரத்துசெய்வது போல, டெல்டா விவசாயிகளின் விவசாயக்கடனை ரத்து செய்யவேண்டும். விவசாயிகளே இந்தியாவின் அடையாளம். தாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்குச் செலுத்தும் ஜி.எஸ்.டி. வரியிலும் மத்திய அரசுக்கும் சம பங்கு கிடைப்பதை மனதில்கொண்டு மத்திய அரசும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்கள் மீண்டுவர நிவாரண உதவிகளை போதுமான அளவு வழங்கி அவர்களின் ரணத்தைப் போக்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்