`15 வருஷமா குடும்பத்தில் ஒருத்தரா இருந்தவர்..!’ - மதனின் உடலைப் பார்த்து கதறி அழுத ஓ.பி.எஸ் | O Panneerselvam cried in madhan funeral

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (24/11/2018)

கடைசி தொடர்பு:12:40 (24/11/2018)

`15 வருஷமா குடும்பத்தில் ஒருத்தரா இருந்தவர்..!’ - மதனின் உடலைப் பார்த்து கதறி அழுத ஓ.பி.எஸ்

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளராக இருந்த மதன், நேற்று மரணமடைந்தார். கடந்த வாரம், பெரியகுளம் ரோடு லெட்சுமிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்த மதன், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். நேற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்செய்தி தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரின் பால்ய நண்பர்தான் மதன். தனது மகனின் நண்பன், சின்ன வயதில் இருந்தே பார்த்துவருகிறோம். நல்ல பையன் என்றெல்லாம் நினைத்தே தனது உதவியாளராக வைத்துக்கொண்டார் ஓ.பி.எஸ். தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், பல சமயங்களில் சென்னை வரை ஓ.பி.எஸ் உடன் செல்லும் மதன், அவரின் அலுவலக வேலைகளைப் பார்த்துக்கொள்வார். கஜா நிவாரணப் பணிகளில் இருந்த ஓ.பி.எஸ், மதன் விபத்தில் சிக்கிய தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தனது மகன் ரவியை அனுப்பி, "மதனைப் பாத்துக்கோ!" என்று சொல்லியனுப்பினார்.

கஜா நிவாரணப் பணிகள் முடிந்தவுடன், மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டுவரலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று மதன் இறந்த செய்தி அவரை உறையவைத்தது. கண்ணீர் விட்டு அழுத ஓ.பி.எஸ், நேற்று இரவு முழுவதும் மதன் பற்றியே தனது குடும்பத்தாருடன் பேசியிருக்கிறார்.

இந்நிலையில், இன்று காலை தேனி − பெரியகுளம் சாலையில் உள்ள கான்வென்ட் பகுதியில் இருந்து அல்லிநகரத்தில் உள்ள மதன் வீடு வரை, கறுப்பு பேட்ஞ் அணிந்து கட்சி நிர்வாகிகளுடன் மெளன ஊர்வலம் சென்றார். கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், எம்.பி பார்த்திபன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மதன் வீட்டுக்குச் சென்று, அவரது உடலுக்கு மரியாதைசெய்துவிட்டு, மதனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இவ்வளவு ஆண்டுகாலம் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிலேயே பெரும் பகுதியைக் கழித்த மதனின் உடலுக்கு இறுதிஅஞ்சலிசெலுத்த, ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். அனைவரும் மதனின் உடலைப்பார்த்து அழுதனர். மதனின் இழப்பு, தனது வீட்டில் ஒருவர் இல்லாததுபோலவே ஓ.பன்னீர்செல்வம் உணர்வதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.