8 ஆண்டுகளில் இல்லாத மழை! - ராமேஸ்வரத்தில் மிதக்கும் மீனவர் குடிசைகள் | Rameshwaram is raining overnight; Floating fisherman huts.

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:11:52 (27/11/2018)

8 ஆண்டுகளில் இல்லாத மழை! - ராமேஸ்வரத்தில் மிதக்கும் மீனவர் குடிசைகள்

 ராமேஸ்வரத்தில், ஒரே இரவில் 22 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. கடந்த  8 ஆண்டுகளில் இல்லாத இந்த மழையினால், பல்வேறு பகுதிகளில் இருந்த குடிசை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

ராமேஸ்வரத்தில் மழை

கஜா புயல் தாக்குதலுக்கு உள்ளாகும் எனக் கருதப்பட்ட ராமேஸ்வரம் தீவுப் பகுதியில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால், கஜா புயல் திசை மாறியதால், தீவுப் பகுதியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் மையம்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலு இழந்தது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைபெய்துவருகிறது.

பாம்பனில் மழை நீர் புகுந்த மீனவர் குடிசை

 இந்நிலையில், நேற்று இரவு ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் கடும் மழை கொட்டியது. இரவு 10 மணிக்கு  தொடங்கிய மழை, விடியவிடிய இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக ராமேஸ்வரத்தில் 22.6 செ.மீ, பாம்பனில் 15.2 செ.மீ, தங்கச்சிமடத்தில் 15 செ.மீ மழை பெய்தது.

மழை நீர் தேங்கிய பகுதிகள்

இதனால் ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் பகுதிகளான நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், அம்பேத்கர் நகர், மாந்தோப்பு, இந்திரா நகர்,காட்டுப்பிள்ளையார் கோயில் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் திரண்டு, அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், இரவு முழுவதும் தூங்கவில்லை. இதேபோல, அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் மழை நீர் சூழ்ந்தது.

  தங்கச்சிமடம் விக்டோரியா நகர், பாம்பன் சின்னபாலம் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. மேலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் முன்பும், மழைநீர் வெள்ளம்போல ஓடியது. இந்த நீர் கோயிலுக்குள் செல்லாதபடி மோட்டார் எஞ்சின்மூலம் வெளியேற்றினர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ராமேஸ்வரம் வட்டாட்சியர் சந்திரன், தனி வட்டாட்சியர் அப்துல்ஜபார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.