வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (24/11/2018)

கடைசி தொடர்பு:14:25 (24/11/2018)

மின் ஊழியர்கள்தான் 'போர்சேவகர்கள்' - களத்தில் சுழலும் `சூப்பர் ஹீரோ'க்களுக்கு குவியும் பாராட்டு!

நாகப்பட்டினம் மாவட்டம், கஜா புயலால் பலத்த சேதம் அடைந்துள்ளதால், சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் இணைப்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சூறைக்காற்று பலமாக வீசியதால் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து, மின் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துயரை போக்கி, இருண்டுகிடக்கும் மக்களின் வீடுகளில் ஒளி ஏற்ற இரவு பகல் பாராமல் உழைக்கும் மின் ஊழியர்கள்தான் சிறந்த 'போர்சேவகர்கள்' என்று பாராட்டுகள் குவிகிறது.

மின் ஊழியர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டம் கொளப்பாடு, திருக்குவளை, திருப்பூண்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மின் பணியாளர்கள் சேதமடைந்த மின்கம்பங்களுக்குப்  பதிலாக புதிய மின் கம்பங்களை நிறுவி, மின் விநியோக சீரமைப்புப் பணிகளை இரவு பகல் பாராமல் மேற்கொண்டுவருகின்றனர். கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மின் விநியோக கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிக்காக வந்துள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மின் வாரியப் பணியாளர்கள், திருமண மண்டபங்களில் முகாமிட்டுப் பல்வேறு கிராமங்கள் மற்றும் வேதாரண்யம் துணை மின்நிலையத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மின்வாரியப் பணியாளர்கள் சீரமைப்புப் பணிகளில் மிக விரைவாக, பணியின்போது பெய்யும் மழையைக்கூட பொருட்படுத்தாமல், பொதுமக்களின் சிரமத்தை விரைவில் போக்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் மின்வாரியப் பணியாளர்களால் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. புயலினால் இதுவரை 1,09,000 மின்கம்பங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. அவற்றில் 45,000 மின் கம்பங்கள் சீர்செய்யப்பட்டு, இந்த சூப்பர் ஹீரோஸால் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. 

மின் ஊழியர்கள்

குறிப்பாக, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில், 50 சதவிகித மின் விநியோகப்பணிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 சதவிகித மின் விநியோகப் பணிகளும், பட்டுக்கோட்டை பகுதியில் 45 சதவிகித மின் விநியோகமும் வழங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவந்தாலும், வயல் வெளிகளில் அதிக மழைநீர் தேங்கி இருந்தபோதிலும் மின் இணைப்புகள் ஏற்படுத்திட மின்கோபுரங்கள் அமைக்கும் பணியை விரைவாகச் செய்துவருகின்றனர்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாய்மேடு துணை மின் நிலையத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்டு மின் கம்பங்களைச் சீரமைக்கும் பணியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

மின் ஊழியர்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில், இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்க்கைக்குத் திருப்ப கடுமையாக உழைத்து வரும் மின் ஊழியர்கள்தான் உண்மையான 'போர்சேவகர்கள்' என்று பாராட்டினார்.