வீடியோ மூலம் யுவராஜ் ஆட்களை அடையாளம் காட்டிய நண்பர்... சூடுபிடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு! | Gokulraj's friend identified the Yuvaraj and gang in the video

வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (24/11/2018)

கடைசி தொடர்பு:15:20 (03/12/2018)

வீடியோ மூலம் யுவராஜ் ஆட்களை அடையாளம் காட்டிய நண்பர்... சூடுபிடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு!

``இந்த வழக்கை சிறப்புக் குழு மருத்துவர்கள் பிரேதக் கூராய்வு செய்ய வேண்டும் என்றும், அதை வீடியோ எடுக்க வேண்டும் என்றும், அதை சீலிட்ட தபாலில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என்றும், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தேன்."

வீடியோ மூலம் யுவராஜ் ஆட்களை அடையாளம் காட்டிய நண்பர்... சூடுபிடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு!

சேலம் மாவட்டம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு, நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜின் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோர் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். வழக்கம்போல யுவராஜும், அவருடைய ஆட்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலையில், கோகுல்ராஜின் நண்பரும் வழக்கறிஞருமான பார்த்திபன் மீண்டும் வாக்குமூலம் அளித்தார். அதன் விவாதம் இதோ:

''ஓர் ஆண், பெண்ணுடன் கோயில் பேருந்தில் ஏறி மலையிலிருந்து அடிவாரம் வந்தேன். சிறிது நேரத்தில் வெள்ளை நிற டாடா சஃபாரி கார் வந்தது. அந்த காரில் சிவப்பு பச்சை நிறக் கொடி கட்டியிருந்தது. அதில் 'தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை' என்று எழுதியிருந்தது. அந்த காரில் யுவராஜ் இருந்தார். என்னிடம் யுவராஜ் பேசினார். அப்போது செல்போனை யுவராஜிடம் கேட்டேன்.

யுவராஜ் - கோகுல்ராஜ் கொலை வழக்கு

இரவு 8 மணிக்குமேல் வீட்டுக்கு வந்து செல்போனைத் தருவதாக யுவராஜ் கூறினார். 'கோகுல்ராஜ் எங்கே' என்று கேட்டேன். கோகுல்ராஜை அனுப்பிவைத்துவிட்டதாக யுவராஜ் கூறினார். அன்றைய தினம் 23.6.2015-ம் தேதி மதியம் 1:30 மணியளவில் யுவராஜிடம் இருந்து என் போனுக்குத் தொடர்புகொண்டேன். அப்போது 'யுவராஜ், இரவு செல்போனை கொடுத்துவிடுவதாகக் கூறினார்' என்று ஸ்வாதி என்னிடம் தெரிவித்தார்.

பிறகு, திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் ஸ்வாதியிடம், 'எதற்காக கோயிலுக்குச் சென்றீர்கள்' என்று கேட்டதற்கு, 22.06.2015-ம் தேதி கோகுல்ராஜ் போன் வாங்குவதற்கு ஸ்வாதியிடம் பணம் கேட்டதாகவும், ஸ்வாதி கோகுல்ராஜுக்குப் பணம் கொடுப்பதற்காக 23.6.2015-ம் தேதி திருச்செங்கோட்டுக்கு வந்ததாகவும், இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை ஸ்வாதி கோகுல்ராஜிடம் கொடுத்ததாகவும், அதன் பிறகு இருவரும் கோயிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து, இருவரும் கோயிலுக்குச் சென்றதாகவும் ஸ்வாதி இன்ஸ்பெக்டரிடம் கூறினார். அதன்பிறகு, இன்ஸ்பெக்டர் போன்மூலம் யுவராஜைத் தொடர்புகொண்டு, 'ஸ்வாதியின் செல்போனை எதற்குக் கொண்டு சென்றீர்கள்' என்று யுவராஜிடம் கேட்டதற்கு, யுவராஜ் போனை மட்டும் வாங்கிக்கொண்டு, கோகுல்ராஜையும் ஸ்வாதியையும் அனுப்பி வைத்துவிட்டதாக இன்ஸ்பெக்டரிடம் போனில் கூறினார்.

கோபால கிருஷ்ண லட்சுமண ராஜு: (இருக்கையை விட்டு எழுந்து வந்து...) இவர் நேரடி சாட்சி கிடையாது. செவிவழி சாட்சி. இதற்கு நான் ஆட்சேபனை தெரிவிக்கிறேன்.

நீதிபதி: ஓகே. பதிவுசெய்துகொள்கிறோம்.

பார்த்திபன்: இன்ஸ்பெக்டர் யுவராஜிடம் செல்போனை காவல் நிலையத்துக்குக் கொண்டுவரும்படி கூறினார். அதற்கு யுவராஜ், தான் சிறிது நேரத்தில் காவல் நிலையத்துக்கு வருவதாகக் கூறினார். செல்போனை மட்டும்தான் யுவராஜ் வாங்கிச் சென்றதாகவும், உங்களையும் (ஸ்வாதி), கோகுல்ராஜையும் அனுப்பிவைத்துவிட்டதாகவும், யுவராஜ் ஸ்டேஷனுக்கு  வந்து செல்போனைக் கொடுப்பதாகக் கூறியதாக ஸ்வாதியிடம் திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் கூறினார். அதற்கு ஸ்வாதி, என்னை மட்டும்தான் வார்ன் பண்ணி அனுப்பியதாகக் கூறினார். (என்பதைத் தட்டச்சாளர் என்னை மட்டும்தான் எச்சரிக்கை செய்து அனுப்பியதாகக் கூறினார் என்று டைப் செய்திருந்தார்)

யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் பிரேம்குமார்: (குறுக்கிட்டு நீதிபதியைப் பார்த்து...)  அவர் எச்சரிக்கை என்றே சொல்லவில்லை. எப்படி எச்சரிக்கை செய்து அனுப்பியதாக எழுதி இருக்கிறீர்கள் என்று தட்டச்சாளரைப் பார்த்து முறைக்க...

நீதிபதி: (கோபமாக...) வார்ன் என்பதற்கு தமிழில் என்ன அர்த்தம்? அதைத்தான் மொழிபெயர்ப்பு செய்து எச்சரிக்கை என்று எழுதி யிருக்கிறார். (சாட்சி பார்த்திபனைப் பார்த்து..) நீங்கள் வார்ன் பண்ணி அனுப்பியதாகக் சொன்னீர்களா... இல்லையா?

பார்த்திபன்: சொன்னேன்.

நீதிபதி: ஒழுங்காகக் கவனியுங்கள். அனைத்தும் வீடியோவில் பதிவாகிக்கொண்டிருக்கிறது. முதலில், நீங்க யாருடைய வழக்கறிஞர்? போய் இருக்கையில் அமருங்கள். (குரலை உயர்த்தி...) போங்க, போய் உங்க இருக்கையில் உட்காருங்க...

(யுவராஜ் வழக்கறிஞர் பிரேம்குமார் இருக்கையில் போய் அமர்ந்தார்).

கோகுல்ராஜ் கொலை வழக்கு - வழக்கறிஞரகள்

பார்த்திபன்: 'கோகுல்ராஜை, யுவராஜும் அவருடைய ஆட்களும் அவர்களோடே வைத்துக்கொண்டார்கள்' என்று இன்ஸ்பெக்டரிடம் ஸ்வாதி கூறினார். அதற்கு இன்ஸ்பெக்டர், 'சிறிது நேரம் காத்திருங்கள். யுவராஜ் வந்துவிடுவார்' என்று ஸ்வாதியிடம் கூறினார். அதன்பிறகு, கோகுல்ராஜின் அம்மா சித்ரா, அண்ணன் கலைச்செல்வன் ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் விசாரித்தார். புகார் கொடுத்தபோது, 'யுவராஜைப் பற்றி ஏன் புகாரில் தெரிவிக்கவில்லை' என்று இன்ஸ்பெக்டர் சித்ராவிடம் கேட்டார்.

யுவராஜ் கட்சியில் பெரிய ஆள் என்றும், ஆகையால் யுவராஜ் பெயரில் புகார் கொடுத்தால் கோகுல்ராஜை ஏதாவது செய்துவிடுவார்கள் என்றும், ஸ்வாதியும் யுவராஜ் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கோகுல்ராஜுடன் கோயிலுக்குச் சென்றால், ஸ்வாதிக்கும் ஸ்வாதி குடும்பத்தாருக்கும் அவப்பெயர் ஏற்படும் என்றும், யுவராஜ் பெயரைக் குறிப்பிடாமல் புகார் கொடுங்கள் என்றும் ஸ்வாதி கேட்டுக்கொண்டதன் பேரில், சித்ரா யுவராஜின் பெயரைக் குறிப்பிடாமல் புகார் கொடுத்ததாகவும் இன்ஸ்பெக்டரிடம் கூறினார். அதற்கு இன்ஸ்பெக்டர், எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டதாகக் கூறினார். அதன்பிறகு, நான் காவல் நிலையத்தைவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

வழக்கறிஞர் நாராயணன்: நீங்கள் காவல் நிலையத்தில் இருந்தபோது யார் யாரெல்லாம் இருந்தார்கள்?

பார்த்திபன்: நான், சித்ரா, கலைச்செல்வன், ஸ்வாதி, கார்த்திக்ராஜா ஆகியோர் இருந்தோம்.

வழக்கறிஞர் நாராயணன்: இன்ஸ்பெக்டர் ஸ்வாதியிடம், 'நீங்கள் ஏன் புகார் கொடுக்கவில்லை' என்று கேட்டதற்கு ஸ்வாதி என்ன சொன்னார்?

பார்த்திபன்: 'கோகுல்ராஜை விட்டுவிடுவார்கள் என நினைத்து நான் புகார் கொடுக்கவில்லை' என்று ஸ்வாதி இன்ஸ்பெக்டரிடம் கூறினார். 24.6.2015-ம் தேதி கார்த்திக்ராஜா, ஸ்வாதியின் தாயாருக்கு போன் செய்து ஸ்வாதியிடம் பேசியபோது, கோகுல்ராஜ் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன் கார்த்திக்ராஜாவிடம் கூறிய விவரத்தை கார்த்திக்ராஜா ஸ்வாதியிடம் கூறியதாகவும், அதன்பிறகுதான் கோகுல்ராஜ் வீட்டுக்குச் செல்லாத விவரம் எனக்குத் தெரியும் என்று ஸ்வாதி இன்பெக்டரிடம் கூறினார்.

மதிய இடைவேளைக்குப் பிறகு...

பார்த்திபன்: 'நீங்க திருச்செங்கோட்டுக்கு வாங்க... கோகுல்ராஜின் குடும்பத்தினர் அங்கு வர்றாங்க' என்று கார்த்திக்ராஜா ஸ்வாதியிடம் கூறினார். அதன்பிறகு, புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்துக்கு வந்ததாக ஸ்வாதி இன்ஸ்பெக்டரிடம் கூறினார். அதன்பிறகு, என் வழக்கு சம்பந்தமான வேலை முடிந்ததால், நான் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டேன்.
24.6.2015-ம் தேதி மாலை 4:00 மணிக்கு கோகுல்ராஜின் உடல் கிழக்குத் தொட்டிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் காவேரி ஆர்.எஸ்ஸுக்கும், ஆனங்கூர் ஆர்.எஸ்ஸுக்கும் இடையே தலை துண்டிக்கப்பட்டுக் கிடப்பதாகவும், அதைப் பார்த்தால் கொலைசெய்து போட்டுள்ளதுபோல் இருப்பதாகவும் சித்ராவிடம் யாரோ தகவல் சொல்லியதாகவும் அந்தத் தகவலை நான் தெரிந்துகொண்டேன். அதன்பின்பு, இந்த வழக்கில் சாட்சியாக இருக்கும் சுவாதி, யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை கடத்திச் சென்றுவிட்டதாகவும் இன்ஸ்பெக்டரிடம் கூறியதற்கு, அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கில் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று நான் போராட்டம் செய்யும்போது, ஈரோடு காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னைக் கைதுசெய்தார்கள்.

'ஸ்வாதி, இந்த வழக்கில் யுவராஜ்தான் கோகுல்ராஜை கடத்திவிட்டார்' எனக் காவல் துறையினரிடம் கூறியபோதும், ரயில்வே காவல் துறையினர் சந்தேக மரணமாக வழக்குப் பதிவுசெய்ததால், இந்த வழக்கை சிறப்புக் குழு மருத்துவர்கள் பிரேதக் கூராய்வு செய்ய வேண்டும் என்றும், அதை வீடியோ எடுக்க வேண்டும் என்றும், அதை சீலிட்ட தபாலில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என்றும், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தேன்.

அந்த மனு, ஹெச்.சி.பி.என்.1541/2015. நான் கோகுல்ராஜின் நண்பர் என்ற முறையில்தான் என்னுடைய மனுவைத் தாக்கல்செய்தேன். அதை உயர் நீதிமன்றம் கோப்புக்கு எடுத்துக்கொண்டு உத்தரவு பிறப்பித்தது. என்னை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்தார்கள்.

வழக்கறிஞர் கருணாநிதி: வீடியோ போட்டால் கோகுல்ராஜ், ஸ்வாதியை அடையாளம் காட்ட முடியுமா?

பார்த்திபன்: முடியும்.

(அதையடுத்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் பதிவுசெய்யப்பட்ட சி.சி.டி.வி., ஃபுட்டேஜ் நீதிமன்றச் சுவரில் ஒளிபரப்பப்பட்டது. கோயிலுக்குள் நுழையும் காட்சி...)

கோகுல்ராஜ் குடும்பத்தினர்

வழக்கறிஞர் நாராயணன்: இந்த வீடியோவில் யார் கோகுல்ராஜ், யார் ஸ்வாதி என்று அடையாளம் காட்டுங்கள்?

பார்த்திபன்: (கேமரா 1: 23.6.2015 காலை 10:52-க்கு கோயிலுக்குள் வரும் காட்சியைப் பார்த்து...) புளூ கலர் ஜீன்ஸ் பேன்ட், கத்தரிப்பூ கலர் முழுக்கை சட்டை போட்டவர் கோகுல்ராஜ். அவரின் இடதுபக்கம் வருபவர் ஸ்வாதி. போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்போதும் இதே ஆடையைத்தான் அணிந்திருந்தார்.

(பிறகு, கோகுல்ராஜையும் ஸ்வாதியையும் கோயிலைவிட்டு வெளியே யுவராஜும், அவருடைய ஆட்களும் கூட்டிச்செல்லும் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.)

வழக்கறிஞர் நாராயணன்: இந்த வீடியோவில் இருப்பவர்கள் யார் யார் இந்தக் கூண்டுக்குள் நிற்கிறார்கள் என்று சொல்லுங்கள்?

நீதிபதி: (யுவராஜ்  மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்த்து...) எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.

பார்த்திபன்: (கேமரா 1: 23.6.2015 காலை 11:57-க்கு கோயிலைவிட்டு வெளியேறும் காட்சியைப் பார்த்து...) முதலில் போகும் நபர் இங்கு மூன்றாவதாக நிற்கிறார்.

நீதிபதி: உன் பேரு என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்: (கண்கள் சிவந்தவாறு) என் பேரு சந்திரசேகரன்.

வழக்கறிஞர் நாராயணன்: ஸ்வாதியை யார் அழைச்சுட்டுப் போறாங்க?

கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜு: (இருக்கையில் இருந்து கத்தியவாறு...) இந்தக் கேள்வியை நான் ஆட்சேபனைசெய்கிறேன்.

நீதிபதி: என்ன காரணம்?

கோபால கிருஷ்ண லட்சுமண ராஜு: பதிலுடைய வினா.

நீதிபதி: சரி, மாற்றிக் கேளுங்கள்.

வழக்கறிஞர் நாராயணன்: ஸ்வாதியோடு யார்கூடப் போகிறார்?

பார்த்திபன்: ஒரு பெண், ஓர் ஆணுடன் செல்கிறார்.

வழக்கறிஞர் நாராயணன்: கோயிலுக்கு வெளியே சென்றவர்களில் யார் யார் மீண்டும் உள்ளே வரவில்லை?

பார்த்திபன்: ஸ்வாதி, ஒரு பெண், மூன்றாவதாக இங்கு நிற்கும் நபர் ஆகிய மூன்றுபேரும் மீண்டும் உள்ளே வரவில்லை.

நாராயணன்: போகும்போது எத்தனை பேர் போனார்கள்? உள்ளே வரும்போது எத்தனை பேர் வருகிறார்கள்?

நீதிபதி: இந்தக் கேள்வியெல்லாம் வேண்டாம் விடுங்க.

வழக்கறிஞர் நாராயணன்: வீடியோவில் இருப்பவர்கள் இங்கு கூண்டுக்குள் நிற்கிறார்களா என்று அடையாளம் காட்டுங்கள்.

பார்த்திபன்: (வீடியோ காட்சியைப் பார்த்து...) வெள்ளைச் சட்டை, காக்கி பேன்ட் அணிந்திருப்பவர் இங்கு 10-வது நபராக நிற்கிறார்.

நீதிபதி: (கையைத் தூக்கி உங்க பேரைச் சொல்லுங்க...)

குற்றம் சாட்டப்பட்டவர்: (சிரித்துக்கொண்டு...) யுவராஜ்

பார்த்திபன்: வீடியோவில் அவருக்கு இடது புறத்தில் இருப்பவர் இங்கு ஏழாவது நபராக நிற்கிறார்.

நீதிபதி: (கையைத் தூக்கிய நபரைப் பார்த்து... ) உங்க பேரு என்ன?

குற்றம்சாட்டப்பட்டவர்: (இறுக்கமான முகத்தோடு) அருண்.

பார்த்திபன்: வீடியோவில் பச்சை கட்டம்போட்ட சட்டை போட்டிருப்பவர் இங்கு கறுப்பு கலர் சட்டை போட்டு நிற்கிறார்.

யுவராஜ்

நீதிபதி: உன் பேரு என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்: (பிதுங்கிய கண்களோடு) செல்வராஜ்

பார்த்திபன்: வீடியோவில் வெள்ளை வேட்டி கட்டி இருப்பவர் இங்கு வலது புறத்தில் முதலாவது நபராக நிற்கிறார்.

நீதிபதி: உன் பேரு என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்: (சாதாரணமாக...) சதீஸ்குமார்.

பார்த்திபன்: வீடியோவில் கடைசியாகச் செல்பவர் இங்கு கடைசியாக நிற்கிறார்.

நீதிபதி: உன் பெயர் என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்: குமார்.

(அதையடுத்து கேமரா 5-ல் பதிவான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.)

பார்த்திபன்: (வீடியோவைப் பார்த்து கேமரா 5, 23.6.2015, 10:56) சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் செல்லும் நபர்கள் கோகுல்ராஜ், ஸ்வாதி.

(தொடர்ந்து செல்போன் வீடியோவில் கோகுல்ராஜ் பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது.)

பார்த்திபன்: (வீடியோவைப் பார்த்து...) வீடியோவில் பேசும் நபர் என் நண்பர் கோகுல்ராஜ். அவர் இயல்பாகப் பேசவில்லை. யாரோ அவரை மிரட்டிப் பேச வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர் பேசியதில், 'தம்பியும் அம்மாவும் நல்லா இருக்க வேண்டும், அப்பா போன இடத்துக்கு நான் போகிறேன்' என்று பேசியுள்ளார். ஆனால் கோகுல்ராஜுக்கு தம்பி யாரும் இல்லை. அண்ணன்தான் உள்ளார்.

(இறுதியாக, பிரபல மீடியா ஒன்றில் யுவராஜ் பேட்டி கொடுத்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.)

வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வீடியோவில் பேட்டி கொடுக்கும் நபர் யார்?

பார்த்திபன்: யுவராஜ்

வழக்கறிஞர் கருணாநிதி: இதையெல்லாம் சி.பி.சி.ஐ.டி எங்கு, எப்போது விசாரித்தார்கள்?

பார்த்திபன்: எனக்கு சம்மன் அளித்து 27.11.2015-ம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீஸார் என்னை கோவை அலுவலகத்தில் வைத்து விசாரித்தார்கள்.

இதையடுத்து, நீதிபதி இளவழகன் யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜுவை குறுக்கு விசாரணை செய்ய அழைத்தார். ஆனால் அவர், 'எனக்கு நேரம் வேண்டும்' என்றதால், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து, யுவராஜ் உட்பட 15 பேரை காவல் துறை கஸ்டடி எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.


டிரெண்டிங் @ விகடன்