`4 மணி நேரம் மட்டுமே தூக்கம்' - கஜா மீட்புப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ உருக்கம் | gaja cyclone - thamimun ansari shares his experience

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (24/11/2018)

கடைசி தொடர்பு:16:45 (24/11/2018)

`4 மணி நேரம் மட்டுமே தூக்கம்' - கஜா மீட்புப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ உருக்கம்

கஜா மீட்பு பணியில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ.

 கஜா புயல் மீட்புப் பணியில் 14 நாள்களாக ஈடுபட்டுவரும் நாகை தொகுதி எம்.எல்.ஏ தமிமுன்அன்சாரி, தினமும் 4 மணி நேரம் மட்டுமே   தூங்குவதாகத் தெரிவித்தார். 

 கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் டெல்டா மாவட்ட மக்கள். புயலின் கோரதாண்டவத்தால் இயல்பு வாழ்க்கையை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊருக்கே சோறுபோட்ட டெல்டா மாவட்டங்கள், இன்று ஒருவேளை உணவுக்காகக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளில், அமைச்சர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் மீட்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டுவருகின்றனர். கடந்த 10 நாள்களாக நாகப்பட்டினம் தொகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுவரும் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ-விடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 மீட்பு பணிகள் எப்படி நடந்துகொண்டிருக்கின்றன? 

``மீட்புப் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், தன்னார்வத் தொண்டுநிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், சிறப்பாகவும் துரிதமாகவும் ஈடுபட்டுவருகின்றனர். ஒவ்வொருவரின் பணியையும்  பாராட்ட வேண்டும். இரவு பகல், மழை எனப் பாராமல் மீட்பு பணிகள் நடப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகின்றன. நாகைத் தொகுதியில் மட்டும் 44,000 மக்கள் முகாம்களில் தங்கியிருந்தனர். அவர்களில் 70 சதவிகிதம் பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்."

நிவாரணப் பணிகளில் அரசின் செயல்பாடுகள் எந்த வகையில் உள்ளது? 

 ``நாகை சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஐஏஎஸ் அதிகாரிகள் சுகன்தீப்சிங்பேடி, ராதாகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்துவருகிறார்கள். மின் பாதிப்புகளை உடனடியாகச் சரிசெய்துவருகின்றனர். மக்களுக்குத் தேவையாக குடிநீர், உணவு, குழந்தைகளுக்குப் பால், பிஸ்கட், பெண்களுக்கு நாப்கின் என ஒவ்வொருவரின் தேவையும் பூர்த்திசெய்யப்பட்டுவருகிறது. நாகை நகராட்சிப் பகுதிகளில், 95 சதவிகிதம் மின்இணைப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டன. புறநகர் பகுதிகளில் மின் சீராமைப்புப் பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. 4,500 மின் ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். அவர்கள்தான் நிஜ ஹீரோக்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன."

கஜா மீட்பு பணியில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ.  

குடிநீர், அடிப்படைத் தேவைகள் கிடைக்கவில்லை என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு என்ன காரணம்?

 ``கஜா புயல் குறித்த தகவல் கிடைத்ததும் அரசு முன்எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. கடந்த 17, 18 ஆகிய தேதிகளில், திட்டமிடப்படாமல் நிவாரணப் பணிகள் நடந்தன. இதனால் குக்கிராம மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை என்று மறியல் போராட்டம் நடந்தன. மேலும், மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் துண்டிப்பு காரணமாக என்ன நடக்கிறது என்று மக்களுக்குத் தெரியவில்லை. அச்சம், வதந்தி காரணமாகவும் சில இடங்களில் மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், தற்போது நிலைமை அப்படியல்ல. நிவாரணப் பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. மறியலில் ஈடுபடும் மக்களிடம் நிலைமையை விவரிக்கும்போது, அதை உணர்ந்து அவர்கள் கைவிட்டுவிடுகின்றனர்."

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எப்போது இயல்பு நிலைமைக்குத் திரும்பும்?

``கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு மாத காலம் நிவாரணப்பணிகள் தேவைப்படும். பாதிப்பு குறைவாக உள்ள இடங்களுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும்."

பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததற்கு விமர்சனம் எழுந்துள்ளதே?

 ``பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தரைவழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து, மக்களுக்கு ஆறுதல் கூறவேண்டும். அப்போதுதான் பாதிப்புகளை அவர்கள் நேரில் பார்க்க முடியும். 15,000  கோடிரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும், பாதிப்புகள்குறித்து அவசரப்படாமல் கணக்கிட வேண்டும். அதன்பிறகு, தேவையான நிதியுதவி அளிக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை வேண்டும்"

 கஜா மீட்பு பணியில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ.

மக்களுக்கு இப்போது என்ன தேவை?

 ``மீட்புப் பணிகளோடு உடமைகளையும் விவசாயத்தையும் இழந்த மக்களுக்கு மனரீதியான ஆறுதல் தேவை. அதற்கான கவுன்சலிங் அளிக்கப்பட வேண்டும். அதோடு, சுகாதாரச் சீர்கேடுகளைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன்பிறகு, பாதிப்புகளைக் கண்டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும். தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்." 

மீட்புப் பணிகள்குறித்து என்ன சொல்கிறீர்கள்? 

 ``வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது, மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கஜா புயல் அறிவிப்பு வெளியானதும் என்னுடைய தொகுதியான நாகைக்கு கடந்த 14-ம் தேதியே வந்துவிட்டேன். புயலுக்கு முன் மக்களுக்குத் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டேன். புயல் பாதிப்புக்குப் பிறகு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பேரிடர் மீட்புக் குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக நாகை, தோப்புத்துறை கட்டிமேடு, திருப்பூண்டி, அதிராம்பட்டினம், உடையநாடு ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ம.ஜ.க-வினர் உள்ளனர். கடந்த 14-ம் தேதி முதல் இன்று வரை (நவ 24) வரை 10நாள்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறேன். தினமும் காலை 5 மணி முதல் இரவு 1.30 மணிவரை மீட்புப் பணிகளுக்காகச் செலவிட்டுவருகிறேன். இதனால், 4 மணி முதல் 5 மணி வரைதான் கடந்த 10 நாள்களாகத் தூங்கமுடிகிறது. இதன்காரணமாக இருமல், சளி, தொண்டை வலியால் பாதிக்கப்பட்டாலும் மக்களுக்கு சேவை செய்வதில் ஏற்படும் திருப்தியால் பாதிப்புகள் பெரியளவில் தெரியவில்லை."