போலீஸைப் பிடித்த போலீஸ்  -பதறவைக்கும் சிசிடிவி காட்சி! | police arrested co worker in chennai caught in CCTV

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:17:37 (24/11/2018)

போலீஸைப் பிடித்த போலீஸ்  -பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

சென்னை தேனாம்பேட்டை சிக்னலில் காத்திருந்த போலீஸ் அதிகாரிகள், பைக்கில் வந்த இன்னொரு காவலரை மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சி வைரலாகிவருகிறது.

சிசிடிவி பதிவால் சிக்கிய போலீஸ்

சமூக வலைதளத்தில் 2 நிமிடம், 53 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ, தமிழக காவல் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோ, 21 -ம் தேதி 11.44 மணிக்கு சிசிடிவி-யில் அந்தக் காட்சி பதிவாகியுள்ளது. தேனாம்பேட்டை சிக்னல் பகுதியில் பதிவான அந்த வீடியோ காட்சியைப் பார்த்தவர்களின் மனம் பதறுகிறது. 

தேனாம்பேட்டையில் சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருக்கின்றன. அப்போது வேகமாக பைக்கில் வந்த ஒருவரை போக்குவரத்து போலீஸார் வழிமறிக்கின்றனர். பைக்கில் வந்தவர், கட்டுப்பாட்டை இழந்து மினி லாரியின் மீது மோதி கீழே விழுகிறார். அதன்பிறகு, அந்த நபரை போலீஸார் அங்கிருந்து அழைத்துக்கொண்டு வருகிறார். பிறகு, அவரிடம் விசாரணை நடக்கிறது. சைரன் வைத்த போலீஸ் வாகனத்தில் அந்த நபர் ஏற்றப்படுகிறார். இதைப் பார்த்தால், குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் மடக்கிப் பிடிக்கிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால், உண்மை அது இல்லை. பைக்கில் வந்த நபரும் போலீஸ் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

 போலீஸை ஏன் போலீஸ் இப்படி அடாவடியாகப் பிடிக்க வேண்டும் என்பது அனைவரின் கேள்வி. அதற்கான பதில் இதோ... 

பைக்கில் வந்த நபரின் பெயர் தர்மன். போக்குவரத்து காவலராகப் பணியாற்றுகிறார்.  தாயாரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக தர்மன், உயரதிகாரிகளிடம் விடுமுறை கேட்கிறார். ஆனால், விடுமுறைக்கான அனுமதியை உயரதிகாரிகள் வழங்கவில்லை. இதனால் தர்மன், வாக்கிடாக்கியில் உயரதிகாரிகளைத் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதைக்கேட்ட  ஒட்டுமொத்த போலீஸாரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தர்மன் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

 இதனால், தேனாம்பேட்டை போக்குவரத்து போலீஸாரும், ரோந்து வாகன போலீஸாரும் தர்மன் எங்கு இருக்கிறார் என்று விசாரித்தனர். அப்போது அவர், தேனாம்பேட்டை சிக்னல் பகுதியில் பைக்கில் செல்லும் தகவல் கிடைத்தது. உடனடியாக அவரைப் பிடிக்கும்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. பைக்கில் வந்த தர்மனைத்தான் போலீஸார் மடக்கினர். அப்போது அவர், மினி லாரிமீது மோதி கீழே விழுந்தார். அவர் குடிபோதையில் இருப்பதை உறுதிசெய்ய, அவருக்கு பரிசோதனை நடத்தியுள்ளனர். 

 

 

 இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``சிசிடிவி கேமரா பதிவுகுறித்து விசாரித்துவருகிறோம். விடுமுறை கொடுக்காத ஆத்திரத்தில் காவலர் தர்மன் உயரதிகாரிகளைக் கடுமையாகப் பேசியது தவறு. அதே நேரத்தில், அவரின் பைக்கை வழிமறித்த முறையும் தவறானது. தவறு செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர் தர்மன் குடிபோதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதற்கான பரிசோதனை முடிவு வந்தபிறகு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். காவலர் தர்மன் மற்றும் அவருக்கு விடுமுறை அளிக்காத இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளோம்" என்றனர். 

 இந்நிலையில் போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரனை ஆயுதப்படைக்கு மாற்றி போக்குவரத்து கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.