``கேட்ட உடனே உதவினார்" - சத்யராஜ் குறித்து நெகிழும் ஆசிரியர் | Actor sathyaraj donates for Gaja relief team

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (24/11/2018)

கடைசி தொடர்பு:16:53 (24/11/2018)

``கேட்ட உடனே உதவினார்" - சத்யராஜ் குறித்து நெகிழும் ஆசிரியர்

கஜா புயலால் பாதித்தோருக்கு, ராணுவத்தைப்போல வந்து தன்னார்வ இளைஞர்கள் டெல்டா பகுதியில் உதவிவருகின்றனர். அதில், தனது நண்பர்கள் மூலமாக சத்தமில்லாமல் உதவிவருகிறார் நடிகர் சத்யராஜ்.

கஜா

கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாகப் பாதித்தன. புயல் கரையைக் கடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், பல இடங்களில் இன்னும் நிவாரண உதவிகள் சென்று சேரவில்லை.  அரசு அதிகாரிகள், மின் இணைப்பு, சாலைகளைச் சரிசெய்தல் எனத் தீவிரமாகச் செயல்பட, தன்னார்வ அமைப்புகள், கல்லூரி மாணவர்கள்  தனிநபர்கள் எனப் பலரும்  மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கிவருகின்றனர். 

சத்யராஜ் 

திருவாரூர் மாவட்டத்தின் உட்புற கிராமங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில், வீட்டின் தரை காய, மின் இணைப்புப் பெற மேலும் 15 நாள்கள் ஆகும் நிலை உள்ளது. தற்போது அங்கு மழை பெய்துவருவதால், கடும் சிக்கல் நிலவுகிறது. அவர்களின் அடிப்படைத் தேவைகள் நேரடியாகச் சென்றடைய, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், குடவாசல் அரசுப் பள்ளி ஆசிரியர் வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர், பொருள்களைப் பெற கோவையில் சனி ஞாயிறு தங்கி சேகரிக்கின்றனர். இவர்கள், நடிகர் சத்யராஜ் நண்பரின் மூலம் சத்யராஜைத் தொடர்புகொண்டனர். 

உதவி கேட்ட உடனே 50 ஆயிரம் ரூபாய் அனுப்பிவைத்தார். இதைப்போலவே நெருங்கிய நண்பர்கள் மூலம் சத்தமில்லாமல் உதவி வருகிறார் சத்யராஜ்.  ஆசிரியர் வெங்கட்ராமன் கூறும்போது,  ``ஒரே போனில் எங்களை நம்பி உடனே பணம் அனுப்பிவைத்தார். இதே போன்று, அவர் சத்தமில்லாமல் பல லட்ச ரூபாய் வரை மறைமுகமாக உதவிசெய்துள்ளார்.  ஒவ்வொரு பொருளையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்போம்” என்றார் நெகிழ்ச்சியாக.