`கௌரவமா வாழணும்!’ - திருநங்கை காயத்ரி தொடங்கிய `நங்கை’ உணவகம் | Transgender started tiffen centre for the first time in Thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (24/11/2018)

கடைசி தொடர்பு:16:30 (24/11/2018)

`கௌரவமா வாழணும்!’ - திருநங்கை காயத்ரி தொடங்கிய `நங்கை’ உணவகம்

தூத்துக்குடியில், முதன்முதலாக சுயமாகத் தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற நோக்கில், அரசின் மானிய உதவித் தொகையுடன் தனது சேமிப்புத் தொகையையும் சேர்த்து திருநங்கை ஒருவர் புதிதாக டிபன் சென்டர் ஒன்றைத்  தொடங்கியுள்ளார்.

திருநங்கை காயத்திரி

திருநங்கைகள், சமூகத்தில் ஒதுக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டுவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்புகள் அரசால் உருவாக்கப்பட்டுவருகிறது. இதுதவிர, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், தொழில்கடன் ஆகிய அடிப்படை ஆவணங்களையும், இலவச வீட்டுமனைப்பட்டா போன்ற உதவிகளையும் அரசு வழங்கிவருகிறது. சமூகத்தில் தங்களுக்கு அந்தஸ்து, அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கிய உடன், சுயமாகத் தொழில் தொடங்கி  நடத்திவருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த காயத்ரி என்ற 26 வயதான திருநங்கை ஒருவர் அரசு அளித்த மானியக் கடனுடன் தனது சேமிப்புத் தொகையையும் சேர்த்து டிபன் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். தூத்துக்குடி சவேரியார்புரத்தில், 'நங்கை' என்ற பெயரில் உள்ள இந்த டிபன் கடையை தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் திறந்துவைத்தார்.

டிபன் சென்டர்

இதுகுறித்து காயத்ரியிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10 திருநங்கைகளுக்கு சமூக நலத்துறை சார்பில் மானியக் கடனாக கடந்த 19-ம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலா ரூ.20 ஆயிரம் வழங்கினார். இதுவரை கோயிலில் பூஜைசெய்வது, நடனமாடுவது என என் வாழ்க்கையைக் கழித்துவந்தேன். சுயமாகத் தொழில்செய்து, கெளரவமாக வாழ வேண்டும் என நினைத்தேன். சின்ன வயசுல இருந்தே சமையலில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால், மானியக் கடனாகக் கிடைத்த 20 ஆயிரம் ரூபாயுடன், என்னோட சேமிப்புத் தொகை 30 ஆயிரத்தையும் சேர்த்து, 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய அளவில் தகரக்கொட்டகை அமைத்து டிபன்  கடையை  ஆரம்பித்துள்ளேன்.

திறப்பு விழா

பணம் கிடைத்தும், எனக்கு இடம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஆனால், இந்தப் பகுதியைச் சேர்ந்த பாலராமன் என்பவர்தான் இடம் கொடுத்தார். காலையில் இட்லி, பூரி, பொங்கல், வடையும், இரவில் இட்லி, சப்பாத்தி ஆகியவையும் முதல் கட்டமாக தயார்செய்கிறேன். இந்த சிறிய டிபன் சென்டரை உயர்த்தி, பெரிய ஹோட்டலாக மாற்ற வேண்டும் என்பது என் லட்சியம். அனைத்து திருநங்கைகளுக்கும் உதவி கிடைத்தால், சுயமாகத் தொழில்செய்து  முன்னேறுவார்கள்” என்றார் நெகிழ்ச்சியுடன். டிபன் சென்டரைத் திறந்துவைத்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவருடன் வந்த காவலர்களுக்கு, தங்கள் கையால் மகிழ்ச்சிபொங்க சூடாக இட்லி, சாம்பார்  பரிமாறினர்.    

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க