`அ.தி.மு.க கொடியை கட்டிக்கொண்டு காரில் செல்ல அஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள்!’ - தினகரன் | TTV Dinakaran slams ADMK government over Gaja relief

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (24/11/2018)

`அ.தி.மு.க கொடியை கட்டிக்கொண்டு காரில் செல்ல அஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள்!’ - தினகரன்

புதுக்கோட்டை மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் ,அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் அனைவரும் அநாதைகள், அகதிகள்போல சாலையில் தவிக்கின்றனர். உரிய உணவு, குடிநீர், உடை இல்லாமல் இருக்கின்றனர். அமைச்சர்கள், காவல்துறை பாதுகாப்புடன் சாலையில் சுற்றிவருகின்றனர். அ.தி.மு.க கொடியை காரில் கட்டிச் செல்ல பயப்படும் நிலையில்தான் இருக்கின்றனர். அ.தி.மு.க-வினர் மக்களை இறங்கிப் பார்க்க முடியாத நிலையில்தான் உள்ளனர். கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து, உரிய நிவாரணம் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஊடகத்துறையினர்  எங்கள் கிராமப் பகுதிகளுக்கு வந்து, எங்களது அவலங்களை எடுத்துக் கூறுவதில்லை. இதனால், நாங்கள் படும் சிரமம் அரசுக்குத் தெரியாமலேயே போகிறது என்று மக்கள் கூறுகின்றனர். எனவே, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களாகிய நீங்கள், நான் உட்பட எங்களைப் போன்றவர்களின் பேட்டியைப் போடாவிட்டாலும் பரவாயில்லை. மக்களின் பாதிப்புகளைப் பேட்டியாக எடுத்துப்போடுங்கள்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.