வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (24/11/2018)

தே.மு.தி.க கல்வெட்டை உடைத்த தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!

திருக்கழுக்குன்றம் பகுதியில் தே.மு.தி.க கல்வெட்டை உடைத்ததாக முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ தமிழ்மணி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தே.மு.தி.க வினர் ஆர்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ளது கொத்திமங்களம். தே.மு.தி.க சார்பாக கட்சிக் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் செய்யும் நிகழ்ச்சிக்காக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் திருக்கழுக்குன்றம் பகுதிக்கு 25ம் (நாளை) தேதி வருவதாக இருந்தது. இதற்காக கொத்திமங்களம் பகுதியில் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் தே.மு.தி.கவினர் கல்வெட்டு அமைத்தனர்.

கடந்த 20ம் தேதி இரவு ஜே.சி.பி இயந்திரம் மூலம் திமுக. முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணியின் ஆதரவாளர்கள் அந்த கல்வெட்டை உடைத்துவிட்டார்கள். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்பு இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதியாத காரணத்தால் தே.மு.தி.க தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் கொடி கம்பம் அமைத்த பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சு நடத்தக் காவல்துறையினர் தே.மு.தி.கவினரை அழைத்தனர். பின்பு காவல்துறையினரும் வருவாய் துறையினரும் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அந்த இடம் புறம்போக்கு இடத்தில் இருப்பதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர். அதிகாரிகள் ஆய்வில் நீர்பிடிப்பு பகுதியில் தி.மு.கவினர் கட்டடம் கட்டி வாடகை விட்டிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய் துறையினர் உறுதியளித்தனர். மேலும், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, பரசுராமன், முருகன் உள்ளிட்ட தி.மு.கவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை தே.மு.தி.க சார்பாகத் திருக்கழுக்குன்றத்தில் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க