வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (24/11/2018)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மீது பணமோசடி புகார்!

`ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபுவின் வீராங்கணை அமைப்பிற்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.17 கோடி  வரை பணம் எப்படிக் கிடைத்தது?. அவற்றை எந்தெந்த வழிகளில்  அவர் செலவழித்து உள்ளார் என  தெரிவிக்காதது ஏன்?'' என பவளப்பாறை பாதுகாப்பு இயக்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர்  ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமாபாபுவுடன் இணைந்து போராட்டங்களில் கலந்து கொண்ட  தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளரான தெர்மல் ராஜா என்பவர் ஹோட்டல் அறையில் நெருக்கமாக இருந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தின் முன்பு பாத்திமாபாபுவின் உருவ பொம்மையை எரித்து கோஷம் எழுப்பினர். இது குறித்து பாத்திமாபாபு  எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில்,  ஸ்டெர்லைட்  எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பவளப் பாறைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் விமல்ராஜ் பாத்திமா பாபுவின் மீது பண முறைகேடு குறித்து பகீர் புகார் கூறினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பாத்திமா பாபு செயல்பட்டு வருகிறார். இவர் கல்வி மற்றும் சமூகநலம் குறித்து உதவி செய்ய 'வீராங்கணை' என்ற அமைப்பினை துவக்கி நடத்தி வருகிறார். இவரது இந்த அமைப்பிற்கு ”அதர் மீடியா” என்ற ஒரு என்.ஜி.ஓ., மூலம்,  கடந்த 2006 முதல் 2018 வரை 17,71,37,350 ரூபாய் வரை நிதியாகக் கிடைத்துள்ளது.

இதற்கான ஆதாரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணம் எப்படிக் கிடைத்தது?. அவற்றை எந்தெந்த வழிகளில் அவர் செலவழித்து உள்ளார் என  தெரிவிக்காதது ஏன்?. ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்தி வரும் இவர், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகும், தூத்துக்குடியில் உள்ள நச்சுக்காற்று பரப்பும் மற்ற  தொழிற்சாலைகளை மூடிட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்திய போது,  இவர் ஏன் போராட முன் வரவில்லை?.

அதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னிடம் எல்லா ஆதாரம் இருக்கிறது எனக் கூறி வரும் இவர்,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இதுவரை எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை. அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை இல்லாமல், மற்ற ஆலைகள் பற்றி நான் அபிடவிட் தாக்கல் செய்த போது அவர், அதற்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மட்டுமே  போராட்டம் நடத்தி வரும் இவர், அதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்திற்கு இதுவரை ஏன் கணக்கு காட்டவில்லை.  

ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மார்ச் 24-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு எளிமையாக பூங்காக்களில்  நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கக் குழுவின் கூட்டங்கள், மே-22க்குப் பிறகு பெரிய  நட்சத்திர ஹோட்டல்களில்தான் நடந்து வந்துள்ளது. விமானத்தில் செல்லும் வகையிலும், ரயிலில் முதல்வகுப்பு ஏ.சி.,யிலும் சொகுசாகச் செல்லும் வகையிலும் உடனுக்குடன் இவர்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது?”  என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க