ஊடகங்களுக்குத் தடை - கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் உத்தரவால் சர்ச்சை...! | Coimbatore Government hospital doctor's clash with media people

வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (24/11/2018)

கடைசி தொடர்பு:22:45 (24/11/2018)

ஊடகங்களுக்குத் தடை - கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் உத்தரவால் சர்ச்சை...!

கோவை அரசு மருத்துவமனைக்குள் ஊடகத்தினர் புகைப்படம் எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ கூடாது என்று மருத்துவர் ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை

ஆதரவற்ற நோயாளிகள் தூக்கி வீசும் அவலம், நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுப்பதில் காலதாமதம், மருத்துவ பணியாளர்கள் லஞ்சம், சுகாதார சீர்கேடு, அலட்சியங்கள் என்று கோவை அரசு மருத்துவமனை மீது பல்வேறு புகார்கள் உள்ளன. குறிப்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு, கோவை அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவரின் சடலத்தை, பூனை கடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. இது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.

இந்நிலையில், தற்போது பொதுமக்களின் குறைகளை ஊடகத்தினர் செய்தியாக வெளியிடுவதைத் தடுக்கும் விதமாக மருத்துவமனையின் நிர்வாகியில் ஒருவரான டாக்டர் கணேஷ் பாபு, மருத்துவமனை வளாகத்திற்குள் ஊடகத்தினர் செய்தி ஒளிப்பதிவு செய்ய கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக  டாக்டர் கணேஷ் பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு உரிய பதிலை தெரிவிக்காமல் அதிகார தொனியில் பேசியுள்ளார். இதையடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் தொலைபேசி வாயிலாக, செய்தியாளர்கள் புகார் அளித்தனர். சுகாதாரத்துறை செயலாளர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதாக உறுதியளித்துள்ளார்.