`ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை!’ - நல்லகண்ணு | special act to be implemented to stop honour killing, urges Nallakannu

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (24/11/2018)

`ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை!’ - நல்லகண்ணு

`கஜா புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பாதித்த மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்' என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, நெல்லையில் நடக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படக் குழுவினருக்கான பாராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார். அவரை கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தமிழகத்தில் நாகப்பட்டினம் , திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை. மத்திய அரசும் அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னமும் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், பணிகளை வேகப்படுத்த வேண்டும். கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த மண்டலங்களாக அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும். புயல் பாதித்த பகுதியில் தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு ஒதுக்கிய நிவாரணத் தொகை போதாது, கூடுதலாக ஒதுக்க வேண்டும். கஜா புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பேரிடர் பாதித்த மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து ஆணவக் கொலை நடந்து கொண்டு இருக்கிறது. அதைத் தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். ஆணவக் கொலையை கண்டித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. சுயமரியாதை இயக்கங்கள் ஜனநாயக சக்திகள் இணைந்து ஆணவக் கொலைகளை தடுக்கப் பாடுபடவேண்டும்’’ என்றார்.