’கிடைத்த நிவாரணத்தைப் பகிர்ந்து கொடுத்தோம்!’- இலங்கை அகதிகளின் மனிதநேயம் | gaja cyclone Humanity of SriLankan refugees

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

கடைசி தொடர்பு:06:00 (25/11/2018)

’கிடைத்த நிவாரணத்தைப் பகிர்ந்து கொடுத்தோம்!’- இலங்கை அகதிகளின் மனிதநேயம்

புதுக்கோட்டையில் வசிக்கும் இலங்கை அகதிகள், கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட போதிலும், தங்களுக்கு முகாம் மூலம் கிடைத்த நிவாரணத்தை அருகே உள்ள கிராம மக்களிடமும் பகிர்ந்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியில்  450 இலங்கை அகதிகளின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . கஜா புயலின் கொடூர தாக்குதலுக்கு இவர்களின் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளும் தப்ப வில்லை. இவர்களின் வீடுகள்  அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாம் மூலம்  தார்ப்பாய், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளனர். அதே நேரத்தில், அந்த பகுதி கிராம மக்களுக்கு அரசின் சார்பில் எந்த வித நிவாரணப் பொருட்களும் கிடைக்கவில்லை. இதை அறிந்த இலங்கை அகதிகள் ஒன்றிணைந்து, தங்களுக்குக் கிடைத்த அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அருகே இருந்த கிராம மக்களுக்குக் கொடுத்தனர். இவர்களின் மனித நேயத்தைக் கண்டு கிராம மக்கள் பூரிப்படைந்தனர்.

 இதுகுறித்து அவர்களிடம் பேசினோம், ‘கிராம மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். நாங்கள் அவர்களை பிரித்துப் பார்க்கவில்லை. சென்னையில் புயல் வந்தபோது, எங்களால் முடிந்த உதவியை நாங்கள் சென்னை மக்களுக்கு அளித்தோம். முகாம்களைச்  சேர்ந்தவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தங்களால் கிடைத்த நிவாரணத்தை வழங்குகிறார்கள். அதை நாங்கள் பகிர்ந்து கொடுத்தோம். நிவாரணப் பொருட்கள் கிடைக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட வீடுகளைத் தான் சரி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். அரசின் சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து பார்த்து, அனைவருக்கும் புதிய வீடு கட்டித் தருவதாக தெரிவித்தார். கிடைக்கிறதா என்பதைப் பொருத்து இருந்து தான் பார்க்கவேண்டும்’ என்றனர்.