கமுதியில் ஜவுளி வியாபாரி வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை! | textile business man Murder in kamuthi

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (25/11/2018)

கடைசி தொடர்பு:14:09 (25/11/2018)

கமுதியில் ஜவுளி வியாபாரி வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஜவுளி வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளத்தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமுதியில் கொலை செய்யப்பட்ட ஜவுளி வியாபாரி ஜெயராம் 

கமுதி ராமசாமிபட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ஜெயராம் என்பவர் கமுதி சிங்கன்ராவ் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு பொன்மணி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். ஜெயராம் வெளியூர்களுக்குச் சென்று ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஜெயராமின் வீட்டிற்கு வந்த சிலர் தூங்கிக் கொண்டிருந்த ஜெயராமை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் கொலையாளிகள் ஜெயராமின் உடலை வீட்டு வாசலில் போட்டு சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கமுதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஜெயராமின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர கொலை தொடர்பாக ஜெயராமின் மனைவி பொன்மணியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கமுதி ராமசாமிபட்டியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்நிலையில் ஜெயராம் கொலையில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் எனவும்,  கள்ளத்தொடர்பு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.