வெளியிடப்பட்ட நேரம்: 21:51 (25/11/2018)

கடைசி தொடர்பு:08:51 (26/11/2018)

கஜா புயல் நிவாரணப் பொருள்களை அனுப்ப போட்டி போடும் மாவட்டச் செயலாளர்கள்!

கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு அமைப்பினரும், தன்னார்வலர்களும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பங்குக்கு நிவாரணப்பணிகளுக்கு பொருள்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்ததால், தங்கள் பவரைக்காட்ட மாவட்டச் செயலாளர்கள் பொருள்களை சேகரித்து அனுப்பி வருகிறார்கள். 

ராஜன் செல்லப்பா

பெரும்பாலான அமைச்சர்கள் டெல்டா மாவட்டங்களில் தங்கி இருப்பதால், அவர்கள் இல்லாமலேயே இந்த நிவாரணப் பொருள்களை கட்சி நிர்வாகிகள் அனுப்பி வருகின்றனர். இன்று மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா, ஏற்கெனவே முதலமைச்சரிடம் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதி அளித்த நிலையில் இன்று முப்பது லட்ச ரூபாய் மதிப்பில் பொருள்களையும், அதை விநியோகிக்க கட்சி நிர்வாகிகளையும் திருவாரூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தார். 

இந்த நிலையில், டெல்டா மாவட்ட நிவாரணப் பணிகளில் இருக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள், மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பாக சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரணப் பொருள்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜுவும் டெல்டா மாவட்டத்தில் இருப்பதால், மாநகர கழகம் சார்பாகவும் நிவாரணப் பொருள்கள் அனுப்ப  ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க நிர்வாகிகள் போட்டி போட்டு நிவாரணப் பொருள்களை அனுப்புவதன் மூலம் டெல்டா மக்களுக்கு நன்மை கிடைத்தால் நல்லது என்கிறார்கள் பொதுமக்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க