வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (25/11/2018)

கடைசி தொடர்பு:09:00 (26/11/2018)

`தமிழக முதல்வரும், துணை முதல்வரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா?’ - திருநாவுக்கரசர் விமர்சனம்!

 `தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா?’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்

கூட்டணி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இன்று அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் முதல்வர் நாராயணசாமிக்கு ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருள்களும், நிவாரணப் பணிகளும் இதுவரை சென்றடையவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இதுவரை முதல்வரும் துணை முதல்வரும் முழுமையாக பார்வையிடவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உடனடியாக மத்திய அரசு 5,000 கோடி ரூபாயை நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.

தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர்தான் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். மோடியை எதிர்ப்பவர்களும், காங்கிரஸ், தி.மு.க கூட்டணி தலைமையை ஏற்பவர்களும் கூட்டணிக்கு வரலாம். ம.தி.மு.கவும், வி.சி.கவும் இதுவரை நட்பு ரீதியில்தான் உள்ளது. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா, இருவரும் ஒன்றாக புயல் பாதிப்பு பயணத்தை மேற்கொண்டும் முழுமையான புயல் பாதிப்புகளைப் பார்வையிடவில்லை. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகை தர இருக்கிறார்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க