வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (25/11/2018)

கடைசி தொடர்பு:09:06 (26/11/2018)

``இந்த நேரத்தில் இப்படிச் செய்யலாமா?” - பா.ஜ.க-வை சாடும் முதல்வர் நாராயணசாமி!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், சபரிமலையின் புனிதத்தைக் காக்கவும், கேரள அரசின் செயல்பாடுகளை கண்டிக்கும் விதமாகவும் நாளை (26.11.2018) புதுச்சேரி, காரைக்காலில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது புதுச்சேரி பா.ஜ.க. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் கட்டடங்கள், மரங்கள், குடிசைகள், மின் கம்பங்கள் என அனைத்தும் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைக்கால பேரிடர் நிவாரண நிதி 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நாளை அந்தத் தொகை செலுத்தப்பட உள்ளது.

நாராயணசாமி

மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து புயல் பாதிப்பு தொடர்பாக மத்தியக்குழு ஆய்வு செய்ய வலியுறுத்தியிருந்தேன். அதனடிப்படையில் மத்தியக்குழு நாளை காரைக்கால் மாவட்டத்தில் பார்வையிட்டுவிட்டு நாளை மறுதினம் என்னையும் அமைச்சர்களையும் தலைமைச் செயலகத்தில் சந்திக்க இருக்கின்றது. புயல் பாதிப்பு நிவாரணத் தொகையாக 187 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். அந்தத் தொகை கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கின்றது. சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் கேரள மாநிலத்தின் பிரச்னை. அதற்காக புதுச்சேரியில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. போராட்டம் நடத்துபவர்கள் அங்கு சென்று நடத்த வேண்டும். இது மதம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், மத உணர்வுகளையும், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கேரள அரசு மதிக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் தேவையில்லாத விஷயங்களை அரசியலாக்கி புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காகத்தான் பா.ஜ.க பந்த் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

கஜா புயலின் தாக்கத்தால் ஏற்கெனவே பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் காரைக்கால் மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவைகளை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், இப்படி எந்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாமல் பந்த் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது பா.ஜ.க. இதன்மூலம் அமைதியான புதுச்சேரி மாநிலத்தில் மத உணர்வை தூண்டும் வேளையில் அந்தக் கட்சி ஈடுபடுகிறது. சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் அவர்கள் மீது கடுமையான தண்டனை பாயும். அதனால் தேவையற்ற இந்தப் போராட்டத்தை அந்தக் கட்சி கைவிட வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க