வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (26/11/2018)

கடைசி தொடர்பு:09:14 (26/11/2018)

அண்ணாமலைப் பல்கலைக்கழக 82வது பட்டமளிப்பு விழா- பட்டங்களை வழங்கினார் ஆளுநர் புரோஹித்!

அண்ணாமலைப் பல்கலைக்கழக 82வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.

தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால்புரோஹித்  தலைமை தாங்கி மருத்துவம், பொறியியல், வேளாண்மை
மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 5,808 மாணவர்கள் மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் பயின்று 
தேர்ச்சி பெற்ற 52,764 மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இப்பட்டமளிப்பு விழாவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று
தங்கப்பதக்கங்கள் பெற்ற 43 மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 235 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளைகளின் கீழ் ரொக்கப் 
பரிசுகளையும், பட்டச்சான்றிதழ்களையும் மற்றும் 277 முனைவர் பட்டங்களையும் வழங்கினார்.

சிதம்பரம்

புதுடெல்லி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத் தலைவரும், ஹைதராபாத் பல்கலைக்கழகம் வேந்தரும் மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற 
முன்னாள் தலைமை நீதிபதியுமான நரசிம்ம ரெட்டி கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாவில்  பேசுகையில், ``அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்திய அளவில் உயர்கல்வித்துறையில் தனக்கென தனியிடத்தைப் பெற்றுள்ளது, தற்கால கல்வியாளர்கள் பணம் ஈட்டுவதில் குறியாக இருக்கின்றனர். ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பல்வேறு பாடப்பிரிவுகளின் மூலம் கல்வியை, குறிப்பாகச் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பரப்புகிறது. மனிதர்களின் வாழ்வியல் நடத்தைக்கான வழிகாட்டி நூல் திருக்குறள். மாணவர்கள்  பாடங்களிலிருந்து கல்வி மட்டுமே கற்காமல் அன்றாட வாழ்வியலுக்கான நடத்தைகளையும் மற்ற குடிமகன்களுடன் இசைந்து வாழ்வதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். பட்டமளிப்பு விழா நடத்துவது ஒன்றும் புதிதல்ல, நம்முடைய பாரம்பர்யமாக வருவது என்று தெரிவித்து, பட்டச்சான்று பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

சிதம்பரம்

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம்ஷர்மா, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் சட்டத்துறைச் செயலாளர் பூவலிங்கம், சண்முகசுந்தரம், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.