`ஆய்வாளர் மீது ஏன் வழக்குத்தொடுக்கவில்லை?” - கேள்வி எழுப்பும் போக்குவரத்துக் காவலரின் மனைவி | The cop's wife asks why no case against inspector

வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (26/11/2018)

கடைசி தொடர்பு:10:04 (26/11/2018)

`ஆய்வாளர் மீது ஏன் வழக்குத்தொடுக்கவில்லை?” - கேள்வி எழுப்பும் போக்குவரத்துக் காவலரின் மனைவி

போக்குவரத்துக் காவலரை ஓடும் பைக்கிலிருந்து கீழே தள்ளிவிட்ட வழக்கில் ஆய்வாளர் ரவிச்சந்திரன்மீது வழக்குத் தொடுக்கக் கூறி காவலரின் மனைவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கடந்த புதன்கிழமையன்று போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன் போக்குவரத்துக் காவலர் தர்மராஜாவை பிடிக்கும் முயற்சியில் பைக்கிலிருந்து கீழே தள்ளிவிட்டார். தள்ளிவிடப்பட்ட அவர் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த விபத்து தொடர்பான வீடியோ சனிக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானது. அபிராமபுரம் காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்துக் காவலர்


இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடந்த சனிக்கிழமை அன்று ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி காவலர் தர்மராஜாவின் மனைவி ஸ்ரீதேவி புகார் அளித்திருந்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வரை அந்தப் புகாரின்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ஸ்ரீதேவி,  ``எனது கணவருக்கு அவரது அம்மா இறந்ததற்காக நான்கு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், 16-வது நாள் காரியத்துக்கு விடுமுறை கேட்டபோது மறுத்துவிட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்தவர் குடிபோதையில் வாக்கி டாக்கியில் ஏதோ புலம்பியிருக்கிறார். என் கணவர் செய்தது தவறாகவே இருக்கட்டும். ஆனால், இன்ஸ்பெக்டர் ஓடும் வண்டியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயற்சி செய்தது எந்தவகையில் நியாயமாக இருக்கும். ஏதோ அதிர்ஷ்டத்தில் அவர் உயிர் பிழைத்துவிட்டார். இல்லை என்றால் என் குடும்ப நிலைமை என்ன ஆவது. பொதுவாக என் கணவர் பணியின்போது குடிப்பதில்லை. அன்று ஏதோ கவலையில் குடித்திருந்திருக்கிறார். மற்றபடி இன்ஸ்பெக்டர் சொல்வதுபோல என் கணவர் எப்போதும் குடித்துவிட்டே வேலைக்கு வருவார் என்று சொல்வதெல்லாம் பொய். என் கணவர் வேலையில் இருக்கும்போதெல்லாம் குடிக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.

ஆனால், போக்குவரத்துக் காவல்துறையில் உள்ள சில மூத்த அதிகாரிகள் தர்மராஜாவைப் பற்றிக்கூறும்போது ’அவர் பணிக்கு எப்போதும் ஒழுங்காக வருவதில்லை. கிட்டத்தட்ட 90 நாள்களுக்கும் மேலாக லீவ் எடுத்துள்ளார். பணியிலிருக்கும்போது அடிக்கடி குடித்துவிட்டுத்தான் வருவார். சில மாதங்களுக்குமுன் முதல்வர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போதுகூட அவர் குடித்துவிட்டுத்தான் வந்திருந்தார். அப்படிக் குடித்துவிட்டு வந்திருந்தைப் பார்த்த நாங்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்’ என்கின்றனர்.

இந்த வழக்கைப் பற்றிக் கூறும்போது மயிலாப்பூர் துணை ஆணையர் என்.எம் மயில்வாகனம் ``இந்த வழக்கை விசாரிக்க மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.