``கருப்பட்டியில் கலப்படம் இப்படித்தான் நடக்கிறது!" - பனைப் பாதுகாப்புக் கருத்தரங்கில் தகவல் | palm jaggery that you buy is not pure says experts

வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (26/11/2018)

கடைசி தொடர்பு:11:11 (26/11/2018)

``கருப்பட்டியில் கலப்படம் இப்படித்தான் நடக்கிறது!" - பனைப் பாதுகாப்புக் கருத்தரங்கில் தகவல்

`பனையைப் பாதுகாப்போம், பனையாண்டு வாழ்வோம்’ என்பது கிராமப் பகுதிகளில் பேசப்படுகிறது. பனைப் பொருள்களை சரிவரப் பயன்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் பனை பல நூறு ஆண்டுகள் வாழ்வதுபோல வாழமுடியும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்.

``கருப்பட்டியில் கலப்படம் இப்படித்தான் நடக்கிறது!

ழிந்து வரும் பனை மரங்களைப் பாதுகாக்கும் வகையில், பனைத் தொழில் மற்றும் பனைத் தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கான கருத்தரங்கம் நெல்லையில் நடைபெற்றது. அதில், பனை மரத்திலிருந்து கிடைப்பவற்றைக் கொண்டு செய்யப்பட்ட பொருள்களின் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. கருப்பட்டியில் கலப்படம் நடப்பதால் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. 

சென்னையைச் சேர்ந்த காமராஜர் சமூகநீதிப் பேரவை, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பாக பனைப் பொருள்கள் குறித்த விழிப்பு உணர்வைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. காமராஜர் சமூக நீதிப்பேரவை தலைவர் பாபுஜி தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தொழிலதிபர் ஆர்.கே.காளிதாஸ், ஆய்வாளரும் பேராசிரியருமான மோ.சே.செல்வகுமார், டாக்டர் கவிதா, பனை ஆய்வாளர் சதாசிவம், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

பனைமரத்தின் நன்மைகள், அழிவின் விளிம்பில் இருக்கும் பனைமரங்களைக் காக்க என்ன செய்ய வேண்டும், பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களை எப்படிச் சந்தைப்படுத்துவது, பனையிலிருந்து கிடைக்கும் பொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகத் தயாரித்து விற்பனை செய்யும் வழிமுறைகள் என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் பனை ஆய்வாளர்கள் மட்டும் அல்லாமல் பனை விவசாயிகளும் பனைத் தொழிலாளர்களும் பங்கேற்றனர். 

இந்தக் கருத்தரங்கில், பனை ஓலைகளைக் கொண்டு பெட்டிகளைச் செய்வது, பனை ஏறுவதற்கான பயிற்சி அளிப்பது, பனை மரங்களைப் பராமரித்து வளர்ப்பது குறித்துப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பதநீரைப் பயன்படுத்தி கேக் செய்வது, உணவுப் பொருள்கள் தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சிகளையும் பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கற்றார்கள். பனையிலிருந்து கிடைக்கும் பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

பனை கருத்தரங்கு

இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப்ராஜ் கூறுகையில், ``ஆண்டுதோறும் வெட்டப்படும் பனை மரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு, பனைமரத்தின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரியாததும் ஒரு காரணமாகும். அதனால்தான், பனை மரத்தின் பயன்பாடு குறித்தும் அதில் இருந்து கிடைக்கக் கூடிய அனைத்துப் பொருள்களையும் எப்படிப் பயனுள்ளதாக மாற்றுவது என்பது பற்றியும் விளக்குவதற்காக இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறோம். 

தமிழகத்தில் பனை மரத்தின் பயன்பாடு தெரியாததால் அழிவின் விளிம்புக்குப் பனைமரங்கள் சென்று விட்டன. அதைத் தடுத்தால் மட்டுமே ஆரோக்கியமான மற்றும் பொருளாதாரத்தில் வலிமையான தமிழகத்தை உருவாக்க முடியும், அதற்கு அரசின் பங்கும் முக்கியம். பொதுமக்களும் விவசாயிகளும் பனைமரங்களை வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும், நலிவடைந்துள்ள பனைத் தொழிலாளர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும்’’ என்றார். 

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாபுஜி பேசுகையில், ``பனைத் தொழில் மிகவும் நலிவடைந்து விட்டது. அதற்குக் காரணம், பனை மரங்களில் ஏறுவதற்கு தற்போது யாரும் தயாராக இருக்கவில்லை. இந்தத் தொழில் லாபகரமானதாக இருக்கவில்லை என்பதால் இந்தத் தொழிலில் ஈடுபட யாரும் முன்வரவில்லை. அதனால்தான் பனைத் தொழிலை லாபகரமாகச் செயல்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வல்லுநர்களை அழைத்துவந்து இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறோம். தமிழகத்தில் முதல் முறையாக இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறோம். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும், இதுபோன்ற கருத்தரங்கை நடத்துவோம்’’ எனத் தெரிவித்தார்.   

இந்தக் கருத்தரங்கில் பேசிய காருண்யா பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆய்வாளருமான மோ.சே.செல்வகுமார், ``பனை-தென்னை, கருப்பட்டி, வெள்ளைச்சீனி ஆகியவற்றுக்கு இடையே முரண்பாடுகள் இருக்கின்றன. தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீருக்கு இருக்கும் வரவேற்பு நுங்கு, பதநீருக்குக் கிடைப்பதில்லை. அதேபோல, கருப்பட்டியை விடவும் சீனி அதிகமாக விற்பனையாகிறது. அதனால் மக்கள் மனநிலையை மாற்ற நாம் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

`பனையைப் பாதுகாப்போம், பனையாண்டு வாழ்வோம்’ என்பது கிராமப் பகுதிகளில் பேசப்படுகிறது. பனைப் பொருள்களை சரிவரப் பயன்படுத்தினால் நோய் நொடி இல்லாமல் பனை பல நூறு ஆண்டுகள் வாழ்வது போல வாழமுடியும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். தமிழர் தேசிய மரமான பனை வளர்ப்பதால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. அத்துடன், அதிலிருந்து கிடைக்கக்கூடிய பொருள்கள் இயற்கையானவை என்பதால் எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது. 

பனையிலிருந்து கிடைக்கும் பதநீர் மூலமாகக் கருப்பட்டி காய்ச்சப்படுகிறது. ஆனால், சில சமூக விரோதிகள் அதில் சீனியைக் கலந்து கலப்பட கருப்பட்டியைச் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அதனால் உண்மையான கருப்பட்டியை விற்பனை செய்யும் பனைத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நானும் எனது நண்பர்களும் இணைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்பட்டியைச் சோதனை செய்து பார்த்தபோது சீனிக் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தோம். 

அதனால் இத்தகைய சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க கலப்படச் சட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை என்பது தற்சார்பான தொழில் என்பதால் தமிழகம் முழுவதும் அதை வளர்க்கத் தமிழக அரசு விவசாயிகளை உற்சாகப்படுத்த வேண்டும். பனைப் பொருள்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து லாபகரமான தொழிலாக மாற்ற அனைவரும் இணைந்து முயற்சி செய்ய  வேண்டும்'' என வலியுறுத்தினார். 

கவிதாஅண்ணா பல்கலைக்கழக உணவு ஆய்வகத்தைச் சேர்ந்த முனைவர் கவிதா பேசுகையில், ``பனையிலிருந்து கிடைக்கக்கூடியவற்றைக் கொண்டு மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கும் சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கேக் உள்ளிட்டவை தயாரிக்கும் சோதனைகள் நடந்து வருகின்றன. கருப்பட்டியைப் பயன்படுத்தினால் நீரழிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். நுங்கு, பதநீர் உள்ளிட்டவற்றைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சந்தை வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதனால் அதற்கான ஆய்வுகளை விரைவுபடுத்தி பனைத் தொழிலை பாதுகாத்தால் மட்டுமே, அழிவு நிலையில் இருக்கும் பனைகளைக் காக்க முடியும்’’ என்றார்.  

இந்தக் கருத்தரங்கில், பனைத் தொழில், தொழிலாளர் மேம்பாட்டுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். மாவட்டம் தோறும் ஒரு கோடி பனை மரங்கள் நடுவதற்கான திட்டத்தை அரசு தொடங்க வேண்டும். தற்போது உள்ள பனைமரங்களை தமிழக அரசு உடனடியாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆகிய பனைப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வெள்ளைச் சர்க்கரையான சீனியைத் தடை செய்ய வேண்டும். மதுபான பொருள்கள் மற்றும் இதர போதைப் பொருள்களைத் தடைசெய்ய வேண்டும். பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க பனை வெட்டுவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அரசு அறிவிக்க வேண்டும். பனைத் தொழிலாளர்களுக்கு அரசு காப்பீடு செய்ய வேண்டும். பனையிலிருந்து கிடைக்கும் ஓலை மற்றும் இதர பொருள்களைக் கொண்டு கைவினைப் பொருள்கள் தயாரிப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும்’’ என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


டிரெண்டிங் @ விகடன்