சினிமாவை விஞ்சிய கார் சேஸிங்! போலீஸ் - கடத்தல் கும்பல் இடையே இரவில் நடந்த துப்பாக்கிச் சூடு | Chasing operation of Police to arrest the Kidnap gang

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (26/11/2018)

கடைசி தொடர்பு:11:45 (26/11/2018)

சினிமாவை விஞ்சிய கார் சேஸிங்! போலீஸ் - கடத்தல் கும்பல் இடையே இரவில் நடந்த துப்பாக்கிச் சூடு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கீழ்வாணி நஞ்சமடை தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் (45), நேற்று முன்தினம் இரவு தோட்டத்து வீட்டில் தனியாக இருந்தபோது 5 பேர் வீட்டின் மாடியில் ஏறி, வீட்டிலிருந்த 3 கேமராக்களை உடைத்து அவரை மிரட்டி  காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பல்

பின்பு நேற்று மாலை சக்திவேலின் உறவினர் ஆப்பக்கூடலைச் சேர்ந்த கவிவர்மனைத் தொடர்புகொண்ட கடத்தல் கும்பல் ரூ.50,000 கேட்டுள்ளது. சக்திவேலின் உறவினர்கள் பவானி லட்சுமி நகருக்குச் சென்று கடத்தல் கும்பல் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் சக்திவேலை விடுவிக்காத கடத்தல் கும்பல் ரூ.5 லட்சம் பணம் கேட்டுள்ளது. அதைத்தொடர்ந்து , விவசாயி சக்திவேல் கடத்தப்பட்டது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் புகார் அளிக்கப்பட்டது. விவசாயி கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து கார் நம்பரை வைத்து, கடத்தல் கும்பலை போலீஸார் தேடினர்.

கும்பல் சுட்ட துப்பாக்கி குண்டுகளைத் தேடும் போலீஸ்

இந்த நிலையில், கடத்தல் கும்பல் சேலம் அருகே பணம் கொண்டு வந்து தர வேண்டும் என கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸார் பணத்துடன், சக்திவேலின் உறவினரை அழைத்துச்சென்றனர். சேலம் அருகே பைபாஸில் கடத்தல் கும்பல் பணத்தை பெற்றுக்கொண்ட போது, மறைந்திருந்த போலீஸார் கும்பலை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். போலீஸாரை பார்த்ததும் கடத்தல் கும்பல் தப்பியோடியது. போலீஸார் அவர்களை விரட்டிச்சென்று, நாமக்கல் ரயில்வே மேம்பாலம் அருகே காரை மறித்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட சக்திவேலும் மீட்கப்பட்டார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகன் இளங்கோ (40), வேலூர் மாவட்டம் ஆம்பூர் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த சுரேஸ் மகன் பிரேம் குமார் (28), கவுந்தபாடி பாலாஜி நகரைச் சேர்ந்த குருசாமி  மகன் நடராஜ் (34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல் கும்பல் சுட்ட துப்பாக்கி குண்டு

இதுகுறித்து கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தனபாண்டியன் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். கைது செய்யப்பட்ட இளங்கோவன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தப்பியோடிய 3 பேரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு விரைந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தெரிவித்துள்ளார். சினிமா பாணியில் கடத்தல் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளை  கைது செய்துள்ள காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க