வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (26/11/2018)

கடைசி தொடர்பு:12:06 (26/11/2018)

செம்மரக்கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்த விவேக் ஜெயராமனின் மாமனார் மரணம்!

செம்மரம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனின் சின்ன மாமனார் சிட்டி ராஜா இன்று அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விவேக் ஜெயராமன்

சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன். இவரின் மனைவியின் தந்தை பாஸ்கர். இவரின் தம்பி சிட்டி ராஜா. இவரை போலீஸார் செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிட்டி ராஜாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் இன்று அவர் இறந்துவிட்டார். இந்தத் தகவல் கிடைத்ததும் விவேக் ஜெயராமன் மற்றும் அவரின் உறவினர்கள் அண்ணாநகரில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். 

யார் இந்த சிட்டி ராஜா 

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றியபோது இறந்தார். ஜெயராமனின் மனைவி இளவரசியும் அவரின் குழந்தைகளும் தவித்தனர். கைக்குழந்தையுடன் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பால் அவர்களை அரவணைத்துக்கொண்டார்.  ஜெயராமன் - இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் மீது ஜெயலலிதாவுக்குத் தனிப்பட்ட பாசம் உண்டு. வெளிநாட்டில் படிப்பை முடித்த விவேக் ஜெயராமன், சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்ட சமயத்தில்தான் விவேக் ஜெயராமன் அசுரவளர்ச்சியடைந்தார். சின்ன வயதிலிருந்தே தூக்கி வளர்த்த விவேக் ஜெயராமனின் திருமணத்தை சிறப்பாக நடத்த ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். ஆனால், விவேக் ஜெயராமன், அண்ணாநகரைச் சேர்ந்த பாஸ்கரின் மகள் கீர்த்தனாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். பாஸ்கர் மீதும் அவரின் தம்பி சிட்டிராஜா மீதும் செம்மரக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதனால் திருமணத்தில் பங்கேற்றால் சர்ச்சை கிளம்பும் என்று உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவுக்குத் தகவல் சென்றது. இதனால் விவேக் ஜெயராமனின் திருமணத்துக்கு அவர் செல்லவில்லை. 

இந்தச் சூழ்நிலையில்தான் பாஸ்கரின் தம்பி சிட்டி ராஜாவை செம்மரக்கடத்தல் வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரின் குடோனிலிருந்து கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடிக்கடி காக்கா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிட்டி ராஜா சமீபகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்தான் இன்று  இறந்துவிட்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

விவேக் ஜெயராமன், தன்னுடைய மாமனார் பாஸ்கரனைவிட சின்ன மாமனார் சிட்டிராஜாவிடம் அன்பாக இருப்பாராம். அவரின் மறைவுச் செய்தியைக் கேட்டு விவேக் ஜெயராமன் கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தில் ஒவ்வொருவராக இறந்துவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பரோலில் வந்திருந்தார் இளவரசி. அவர் சிறைக்குச் சென்றபோது நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர, தங்க நகைகள் கள்ளச்சாவி மூலம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவலாளி கோனாக்கை போலீஸார் தேடிவருகின்றனர். இந்தச் சமயத்தில் இளவரசியின் உறவினர் சிட்டிராஜா இறப்பு அந்தக் குடும்பத்தினருக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சசிகலாவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.