வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (26/11/2018)

கடைசி தொடர்பு:14:20 (26/11/2018)

ஐராவதம் மகாதேவன் மறைவு கல்வெட்டு எழுத்தியல் துறைக்கு பேரிழப்பு! - தலைவர்கள் இரங்கல்

மு.க.ஸ்டாலின்

புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (88), சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவையொட்டி தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  ``பத்மஸ்ரீ விருது பெற்ற கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 27 வருடங்களுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணியில் நேர்மையாகப் பணியாற்றி ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு எல்லாம் நல்லுதாரணமாகத் திகழ்ந்தவர். நான்கு வருடங்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி பத்திரிகையுலக நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், இலக்கிய, அறிவியல் உலகத்துக்கு அரிய கருத்துகளையும் விதைத்தவர்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ் மாநாட்டில் சிந்து சமவெளி நாகரிக ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து, ``பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்துகொள்ள முடிகிறது" என்ற அவரின் ஆய்வை மேற்கோள்காட்டி மாநாட்டில் கருணாநிதி தலைமையுரையிலேயே பாராட்டப்பட்டவர். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2009-10-ம் ஆண்டுக்கான `தொல்காப்பியர்' விருதைப் பெற்ற ஐராவதம் மகாதேவன்  மறைவு பத்திரிகை உலகுக்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கிய துறைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன்களுக்கும், உறவினர்களுக்கும், ஆய்வு அறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என அந்த இரங்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ்பா.ம.க தலைவர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ``தொல்லியல் துறை  ஆய்வுகள் மூலம் பல்வேறு உண்மைகளை வெளியுலகுக்கு கொண்டுவந்தவரும், தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், இ.ஆ.ப அதிகாரியுமான ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.

ஐராவதம் மகாதேவன் எளிமையானவர், பொறுமையானவர், பொறுப்பானவர். அவர் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் முத்திரைப் பதித்தவர். தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வுகளின் மூலம் சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளுக்கும், தமிழ் எழுத்துகளுக்கும் ஒற்றுமை இருப்பதை சங்ககால இலக்கியங்களின் துணையுடன் நிரூபித்து சிந்து சமவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டுக் காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரிகம் என்பதை நிறுவியவர். பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டவர். 

தினமணி நாளிதழின் ஆசிரியராக நான்கு ஆண்டு காலந்துக்கும் கூடுதலாக பணியாற்றியவர். இதழியல் அறத்துக்கு உட்பட்டு அந்த நாளிதழை சிறப்பாக நடத்தியவர். அனைத்துத் தரப்பு மக்களும் படிக்கும் நாளிதழாக தினமணியை மாற்றியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமணி நாளிதழ் தமிழ் மணக்கும் நாளிதழாக திகழ்வதற்கு அடித்தளம் அமைத்தவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தான்.

ஐராவதம் மகாதேவனிடம் புதைந்து கிடந்த திறமைகளை தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரின் மறைவு தமிழுக்கும், தொல்லியல் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.