வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (26/11/2018)

கடைசி தொடர்பு:14:40 (26/11/2018)

`சர்கார்' படத்துக்கு கூடுதல் கட்டணம் - மதுரை கலெக்டருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரையில் `சர்கார்' திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

 

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் படம், `சர்கார்.' சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, தீபாவளிக்கு வெளியானது.  இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக படம் வெளியாவதற்கு முன்பாகவே சர்ச்சை ஏற்பட்டது. மதுரையில் `சர்கார்' படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்துசெய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை மதுரையைச் சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் தொடர்ந்திருந்தார். ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. ஆகவே, அது தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிநபர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி விதிக்குட்பட்ட கட்டணத்தை வசூலித்து, அந்த நபர்கள் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணத்துக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் 3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாக இதுபோல கட்டணம் வசூலிக்கப்பட்டது, குறித்து அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள்,  `சர்கார்' படத்துக்கு  கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், நவம்பர் 6 முதல் 16-ம் தேதி வரையில் மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.