வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (26/11/2018)

கடைசி தொடர்பு:15:07 (26/11/2018)

`உங்கள் கவனிப்பு பிரமாதம்!' - அதிர்ச்சி கொடுக்கும் அண்ணா பல்கலை பவர் சென்டர்கள்

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அடுத்த பதிவாளர் யார் என்று சிண்டிகேட் கூட்டத்தில் முடிவாகிய நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்த கணேசன் மீது அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (AUTA) குற்றம் சுமத்தியது. இதனால், பதிவாளர் பதவியிலிருந்து கணேசன் நீக்கப்பட்டார். ஆனால், பதவி பறிக்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே கணேசனுக்கு ஹெல்த் சென்டரில் இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டது, கடும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் அடுத்த பதிவாளர் யார் என்ற தகவல் பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கூட்ட முடிவின்படி பதவி உயர்வு பலருக்கு வழங்கப்பட்டுவிட்டன. அதோடு 50-க்கும் மேற்பட்டவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் பவர் பாயின்ட்களாக இருக்கும் ஆறுபேர், வைத்ததே எழுதப்படாத சட்டமாக உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் கூறுகையில், ``அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கு ஆறு பேர்தான் காரணமாக உள்ளனர். அவர்கள் உயர்பதவியில் இருப்பதால் குற்றச்சாட்டுக்களில் சிக்கி பதவிகளை இழந்தவர்களுக்கு உறுதுணையாக உள்ளனர். துணைவேந்தராக சூரப்பா, நியமிக்கப்பட்டபோது அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக பதிவாளராக இருந்த கணேசன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் அவர்களின் மீது நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போது அவர் அமைதியாக இருந்துவருகிறார். 

கணேசனுக்குப் பதிலாக பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டவர் குமார். இவர், இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். இதனால், பதிவாளர் பதவிக்கு முத்தன், சீனிவாசலு, ஆனந்தகுமார், ரவிக்குமார் ஆகியோர் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதில், முத்தன், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறையின் தலைவராகவும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் கூடுதல் இயக்குநராகவும் உள்ளார். சீனிவாசலு, கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் ஐ.ஓ.எம்-வின் இயக்குநராகவும் உள்ளார். ஆனந்தக்குமார், கம்ப்யூட்டர் டெக்னாலஜியின் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். ரவிக்குமார் சிவில் இன்ஜினீயரிங் துறையின் பேராசிரியராக உள்ளார். குற்றச்சாட்டுக்களில் சிக்காதவர்களைப் பதிவாளராக நியமிக்க வேண்டும்" என்றனர். 

 முத்தன்  அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் கூறுகையில், ``அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் முத்தன், திருச்சியில் மண்டல இயக்குநராகப் பணியாற்றியவர். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்துடன் திருச்சி, கோவை, நெல்லை, மதுரை, சென்னை என 5 தொழில்நுட்ப கல்லூரிகள் இணைக்கப்பட்டன. தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றியவர்கள் நியமனத்தில் சிக்கல் எழுந்தன. அதற்கு தீர்வு காண முத்தன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், நியமன சிக்கலுக்கு தீர்வு எட்டப்படவில்லை. இதனால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்காமல் பலர் உள்ளனர். மேலும்,  துறைத் தலைவராக முத்தன் இருக்கும் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறையில் பணிக்குச் சேர்ந்த மூன்று பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் முத்தன், பதிவாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பே துணைவேந்தர் சூரப்பாவுக்கு அவர் தொடர்பான புகார்கள் வரிசைக்கட்டி செல்லத் தொடங்கியுள்ளன. 

சீனிவாசலு, மீது என்.ஆர்.ஐ இடஒதுக்கீடு மற்றும் இன்ட்ஸ்ட்ரியல் ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள்  விவகார சர்ச்சை எழுந்துள்ளது. அதுதொடர்பாக சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல கல்வித்தந்தை ஒருவரின் மகனிடம் விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தில் முக்கியப் பதவியில் சீனிவாசலு இருந்தவர். ஜியோலஜி படித்த இவர், பதவி உயர்வு மூலம் பல்கலைக்கழகத்தின் முக்கிய பதவியில் இருக்கிறார். பல்கலைக்கழகத்தின் முக்கியமான இரண்டு பதவிகள் இவரிடம் உள்ளது. இவரைப்போல ஒரே நபருக்கு இரண்டு முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பதிவாளர் ரேஸில் பேராசிரியர்கள் ஆனந்தகுமாரும், ரவிக்குமாரும்  உள்ளனர். இதில் ரவிக்குமாரும் சில ஆண்டுகளுக்கு முன், பல்கலைக்கழகத்தில் பரபரப்பான ஒரு குற்றச்சாட்டில் சிக்கியவர். ஆனந்தகுமார் மீது குறிப்பிடும் வகையில் குற்றச்சாட்டு இல்லை. ஆனால், அவரின் உறவினர் ஒருவர், தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றியவர். அவர் மதிப்பெண் விவகாரத்தில் சிக்கியவர். தற்போது, அவரை பணிநீக்கம் செய்ய சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றச்சாட்டுக்களில் சிக்காத ஒருவரை பதிவாளராக துணைவேந்தர் சூரப்பா நியமிக்க வேண்டும். பதிவாளரை நியமிக்க சீனியாரிட்டியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றனர். 

சூரப்பா

சூரப்பாவின் அமைதிக்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது சில முக்கியத் தகவல்கள் வெளியாகின. பல்கலைக்கழகத்தில் முறைகேடு, ஊழல் புகார்களில் சிக்கியவர்கள், கேபினட் கிச்சன் மூலம் நடவடிக்கைகளிலிருந்து தப்பிவருகின்றனர். குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் உயர் பதவியிலிருக்கும் ஒருவரின் வீட்டில் சில மாதங்களுக்கு முன் பெங்களூருவில் பேத்திக்கு பெயர் சூட்டும் விழா நடந்துள்ளது. அதில் பதிவாளர் பதவிக்குப் போட்டிபோடும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர்,  பத்து சவரன் செயின் வழங்கியுள்ளார். அப்போது அந்தக் குடும்பத்தினர், நீங்கள்தான் அடுத்த பதிவாளர் என்று நம்பிக்கையூட்டும் வகையில் சொல்லியிருக்கின்றனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவியிலிருக்கும் ஒருவரின் மனைவி அடையாறில் தமிழ் கற்றுக்கொள்கிறார். அதற்கு ஏற்பாடு செய்தவர்கள், விதிமுறைகளை மீறி சில பதவிகளை தக்கவைத்துவருகின்றனர். துணைவேந்தர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசியின் பெயரைக் கொண்ட பெண் ஒருவர் மூலம் முக்கிய ஃபைல்களின் தகவல்கள் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர்களுக்கே தெரிந்துவிடுகிறது.

 இதுவேறு விதமான புரட்சி 

நீண்ட காலமாக உயர்ந்த பதவியில் இருக்கும் புரட்சியாளர் பெயரைக் கொண்ட ஒருவர், பல்கலைவளாகத்திலேயே குடிபோதையில் அடிக்கடி தள்ளாடி விழுவதை பலர் பார்த்து முகம் சுளிக்கின்றனர். மேலும், பல்கலைக்கழகத்தில் நடக்கும் சிவில் பணிகளில் குறிப்பிட்ட தொகை கைமாறுகிறது. இவரை மாற்ற பலர் முயற்சி செய்தாலும் உயர்கல்வித்துறையில் உள்ள சிலரால் அதே பதவியில் நீடித்துவருகிறார். பல்கலைக்கழகத்தை ஆட்டிப் படைக்கும் ஆறுபேரில் முக்கியமானவர் இவர்தான். இவருக்கு நெருக்கமானவர்களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகளை வாரி வழங்குவதாக சொல்லப்படுகிறது. பல்கலைக்கழக குடியிருப்பில் வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு விதி, வேண்டாதவர்களுக்கு ஒரு நீதி என்று புரட்சியாளர் அதிரடி சட்டங்களை வைத்துள்ளார். 

இதுகுறித்து துணைவேந்தர் சூரப்பாவிடம் கேட்டதற்கு,  ``புதிய பதிவாளர் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். 

முத்தனிடம் கேட்டதற்கு, ``பதிவாளராக யாரை நியமிக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றியவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு தொடர்பான முடிவை அரசுதான் எடுக்க வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் துறையில் பணியாற்றிய மூன்று பேராசிரியர்கள் மீதான புகாரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்துவருகின்றனர்" என்றார். 

சீனிவாசலு சீனிவாசலுவிடம் பேசியதற்கு, ``என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் வதந்தி. தேவையில்லாமல் என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. மதிப்பெண்கள் விவகாரத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ஆதாரங்களுடன் புகார் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். நான் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருக்கிறேன். எனக்கு யார், என்.ஆர்.ஐ, இன்ட்ஸ்ட்ரியல் கோட்டாவில் வந்த மாணவர்கள் என்ற விவரம் என்று தெரியாது. இதனால் மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை" என்றார்

ஆனந்தகுமாரிடம் பேசியதற்கு, `பதிவாளராக யாரை நியமிக்கிறார்கள்' என்று தெரியவில்லை. 

 ரவிக்குமாரைத் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவிக்கான ரேஸில் போட்டியிடுபவர்கள் தங்களின் முழுசெல்வாக்கை காட்டிவருகின்றனர். துணைவேந்தர் சூரப்பாவின் சாய்ஸ் யாரென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!