ஸ்டெர்லைட் வழக்கு! - பசுமைத் தீர்ப்பாயத்தில் தருண் குழு 42 சீலிடப்பட்ட ஆய்வறிக்கை தாக்கல் | Tarun Agarwal submitted study report to National Green Tribunal

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (26/11/2018)

கடைசி தொடர்பு:16:30 (26/11/2018)

ஸ்டெர்லைட் வழக்கு! - பசுமைத் தீர்ப்பாயத்தில் தருண் குழு 42 சீலிடப்பட்ட ஆய்வறிக்கை தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழுவின் அறிக்கை, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று தாக்கல்செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் தருண் குழு ஆய்வு

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் முதலில்  போராட்டத்தைத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, தெற்கு  வீரபாண்டியாபுரம், மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் 100-வது நாளான கடந்த மே 22-ம் தேதி, மக்கள் திரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலைத்தரப்பு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் மாசுகுறித்தும், ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா என்பதுகுறித்தும்  ஆய்வுசெய்ய, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வசீப்தர் தலைமையிலான குழுவை அமைத்து  உத்தரவிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இந்நிலையில், இப்பொறுப்பில் இருந்து வசீப்தர் விலகிக்கொண்டார். இதைத் தொடர்ந்து, மேகாலயா மாநில ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான இருவர் கொண்ட குழுவை நியமித்தது தீர்ப்பாயம்.

தருண் அகர்வால்

இக்குழு, கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை நச்சுக்கழிவுகள் கொட்டிவைக்கப்பட்ட இடம், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள யூனிட்டுகள், குடோன்கள் ஆகியவற்றில் ஆய்வை மேற்கொண்டது. தொடர்ந்து, மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது.   இதில், ஆலையைத் திறக்க வேண்டாம் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. இதேபோல சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாய மண்டல அலுவலகத்திலும்  இரு முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 30-ம் தேதி தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில்,  மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டித்து, நவம்பர் 30-ம் தேதி வரை அனுமதி வழங்கியது. இந்த காலக்கெடு முடிய இன்னும் 4 நாள்கள் உள்ள நிலையில், காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு உள்ளிட்டவைகுறித்து 42 தனித்தனி சீலிடப்பட்ட அறிக்கைகளை தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்தனர். இதையடுத்து, இம்மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க